SEPTEMBER 2026

 

ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க? கடந்த இதழில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிராத சீன தேசத்தைக் குறித்து செய்தித் தாள் வாயிலாக அறிந்துகொண்டு, சீன தேசத்திற்குச் செல்வதையே தனது தரிசனமாகவும் வாழ்க்கையின் குறிக்கோளாகவும் வைத்தவராக, புறப்பட்டுச் சென்ற கிளாடிஸ் அயில்வார்டுவின் வாழ்க்கையில் சந்தித்த நிந்தைகளையும், தோல்விகளையும், அத்துடன் அவர் சீன தேசத்திற்குப் புறப்பட்டுச் சென்றதையும் அறிந்தோம் அல்லவா! இந்த இதழில், சீன தேசத்தில் அவர் தொடர்ந்து செய்த ஊழியத்தை அறிந்துகொள்வோமா? 

அந்நாட்களில் சீன தேசத்தில் இருந்த பாரம்பரிய மூடப்பழக்கம்: பெண்களுக்கு சிறிய பாதங்கள் இருந்தால் தான் நல்ல வரன் கிடைத்து திருமணம் நடக்கும். அதனால், பெண் குழந்தை பிறந்தவுடனே அதன் இரண்டு அழகான கால்களையும் விரல்களை நசுக்கி கட்டிவைத்து விடுவர். பாதம் கட்டும் பழக்கத்தை ஒழிக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. பெண்பிள்ளைகளின் பாதங்களைப் பரிசோதிக்க கிளாடிஸ் தகுதியானவர் என்று தெரிவு செய்யப்பட்டார். ஒவ்வொரு வீடுகளிலுள்ள பெண்களையும் சந்தித்துப் பேசவும், பாதங்களைப் பரிசோதிப்பதோடு சுவிசேஷத்தையும் அறிவிக்கவும் எத்தனை நல்ல வாய்ப்பு! அரசாங்க அதிகாரத்தோடு கோவேறு கழுதை வண்டியில் இரு காவலர்களின் பாதுகாப்போடு அரசுப் பணியோடு அரசாங்க செலவிலேயே மாபெரும் சுவிசேஷப் பணி! 

ஊர்களில், தெருக்களில், பெண்கள் நூல் நூற்பது, தானியம் புடைப்பது போன்ற வேலைகளைச் செய்யும் போது, கூட அமர்ந்து மகிழ்ச்சியோடு உறவாடி, அவர்கள் கலைகளைக் கற்றுக்கொண்டு, வேதத்தின் சம்பவங்களை கதைகளாகவும் மற்றும் அழகாகவும், சீனதேசத்தில் அவர்கள் வாழும் பகுதியிலேயே இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததுபோலவும், கைகளில் காயங்களுடன் அவர்கள் முன்னே உயிர்த்தெழுந்தவராய் நிற்பது போலவும் தத்ரூபமாகச் சொல்லும்போது, கூட இருப்போர் ஆச்சரியத்தால் கண்களை விரித்துக்கொண்டு கேட்பர்.  

தெருக்களில் மட்டுமல்ல யாங்செங்கின் சிறைச்சாலைகளிலும் சென்று பெண்கைதிளையும் மற்றவர்களையும் இரட்சிப்புக்கு நேராய் நடத்தினார். ஜெயிலில் ஜெயிலுக்குள்ளே கைதிகள் வேலையில்லாமல் சோம்பலாய் இருப்பதால்தான் அங்கே விவாதங்களும் சண்டைகளும் வருகிறது. எனவே, அவர்களுக்கு சில கைத்தொழில்களைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, கைதிகள் நல்ல வருமானத்தையும் பெறலாம் என்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த ஜெயில் அதிகாரிகளுக்கு ஊக்கமளித்தார். கிளாடிஸ் அம்மையாரைக் கண்டாலே ஜெயிலில் இருப்போர் கண்களில் ஒளி வீசும். 'உத்தமி" என்று பொருள்படும் 'அயில்வார்டு" என்ற பெயரை அவருக்கு சூட்டி உற்சாகமடைந்தனர்.  

ஆனாலும், கிளாடிஸ் தனிமையில் வாடினார். தனக்கு வாழ்க்கை துணையாக ஒரு வெள்ளைக்கார மிஷனரியோ அல்லது அங்குள்ளவரோ இந்த மலைகளில் நடந்து வரமாட்டாரா என்று எதிர்பார்த்தார்.  ஆனால், நம் ஆண்டவரின் திட்டமோ வேறாக இருந்தது! ஒருமுறை, கருப்பினப் பெண் ஒருத்தி தன் குழந்தையைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். அக்குழந்தையை வாங்குவது ஆபத்தானது என்று தெரிந்தும், 'ஒன்பது பென்ஸ்" கொடுத்து அதை வாங்கி வளர்த்து வந்தார். இப்படியாய் அநேகப் பிள்ளைகள் கிளாடிஸ்க்கு கிடைத்தபடியால் அவர் தனிமையை உணரமுடியாதபடி தலைகீழாய் மாறியது.   

தான் ஒரு பிரிட்டீஸ்காரி என்ற பெருமை ஒரு தடையாக இருப்பதாக உணர்ந்தபோது தனது பாஸ்போர்ட்டை எடுத்து கிழித்து எறிந்துவிட்டு சீனப்பிரஜையாக மாற விண்ணப்பித்தார். சீனர்களும் கிளாடிஸை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.  

1937 ஆம் ஆண்டு சீனா - ஜப்பான் நாடுகளுக்கிடையே போர் மூண்டபோது, பல்லாயிரக்கணக்கான மக்களோடு கிளாடிஸ{ம் பிள்ளைகளோடு பெரும் துன்பப்பட்டார். விமானங்கள் தாழ வந்து திரும்பத் திரும்பக் குண்டுகளைப் போட்டபோது, இவரது கட்டிடமும் இடிந்து நொறுங்கியது. என்றபோதிலும், பாரம் நிறைந்த மனதோடு உதவிக்காகக் காத்திருந்த அநேகருக்கு சேவை செய்தார். ஒருவழியாக, கிளாடிஸ் மற்றும் பிள்ளைகள் தப்பிப் பிழைத்து டிசெக்சௌ போய் சேர்ந்தனர். கைவிடப்பட்ட சில அகதிகளுடைய குழந்தைகளும் மற்றும் அனாதைகளாக்கப்பட்டிருந்தவர்களும் அவர்களோடு இணைந்தனர்.  'நீ இங்கிலாந்திற்குப் போய்விடு; இங்கே உனக்கு ஆபத்து தான்!" என்றபோது, 'இதுதான் என் தாய்வீடு" நான் இங்கேயே இருந்து இங்கேயே மரிப்பேன் என்றார் கிளாடிஸ்.   

கிளாடிஸ் நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகளோடு ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் நோக்கி செல்ல முடிவுசெய்தார். ஜப்பானியர்கள் கிளாடிஸை பிடித்துத் தருவோருக்கு 100 டாலர்கள் தருவதாக அறிவித்தனர். கவலையோடு ஜெபித்துக் கொண்டிருந்தபோது, 'மலைகளுக்கு ஓடிப்போ, தப்பிவிடுவாய்! மறைவான இடங்களில் ஒளிந்துகொள்!" (ஆதி 19:17) வசனங்களின் மூலமாய் தேவன் பேசினார். நீண்ட கடினமான மலைப்பிரயாணம், நெடும் யாத்திரை செய்து மஞ்சள் நதியின் கரையில் வந்து சேர்ந்தபோது, போர் வீரர்கள் கண்களில் எப்படியோ தயவு கிடைக்க, எல்லாரும் தப்பி அக்கரை சேர்ந்தனர்.   

சியானில் இருக்கும்போது விஷஜுரத்தால் பாதிக்கப்பட்டார். அவருடைய ஆங்கில அறிவினால் சிலர் அவரிடம் வந்து ஆங்கிலம் கற்றனர். அதன்மூலம் கிடைக்கும் சிறிய வருமானத்தில் பிழைத்து வந்தார். பல இடங்களில் தங்கியிருந்து ஊழியம் செய்து வந்தபோது, தான் முதலில் செய்தியில் படித்த லாண்ட்சௌ பட்டணத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. தனிமை கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தாலும், தேவன் அவைகளினூடே எப்படி அருமையாய் நடத்திவந்தார் என்று சாட்சி கூறினார். தன் வறுமைக்கு மத்தியிலும் ஒருவேளை உணவை குறைத்துக் கொண்டு வேதாகமக் கல்லூரியில் படிக்கும் மாணவனுக்கு பணம் அனுப்பி வைப்பார் கிளாடிஸ். 

17 ஆண்டுகள் கழித்து 1949ல் கிளாடிஸ் இங்கிலாந்து திரும்பினார். மெலிந்த அற்பமான உருவம் மற்றும் பெற்றோர் அடையாளம் காணமுடியாதபடி இருந்தார் கிளாடிஸ். 'சீனாவுக்குச் சென்ற எங்கள் கிளாடிஸ்" என்று மகிழ்ந்தனர் ஜனங்கள். பெண்கள் கூட்டம் மற்றும் எல்லா சபைகளின் கூட்டங்களிலும் பேச அழைக்கப்பட்டார். தன் பேச்சினால் தூங்குவோரையும் எழுந்து உட்கார வைப்பார். டீடீஊ யில் அவரது வாழ்க்கை வரலாறு அரை மணி நேரம் நடித்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 'தோற்கப்படாதவரில் ஒருவர் கிளாடிஸ் அயில்வார்டு" என்ற தலைப்பில் புத்தகமும் வெளியிடப்பட்டது. 

சீனாவில் கம்யூனிஸம் ஆட்சியில் இருந்ததால் சுவிசேஷத்திற்கு தடை இருந்தது. இவர் தலைக்கு விலை பேசப்பட்டது. சீனாவுக்கு போவதென்பது இனி கூடாது என்று திட்டமாய் தெரிந்தபோதிலும், அங்குள்ள செய்திகளை வளர்த்த பிள்ளைகள் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்வதோடு மிகுந்த பாரத்தோடு ஜெபித்தும் ஆலோசனைகளைத் தந்தும் வந்தார். 'ஒரு சிறிய பெண்மணி" என்ற தலைப்பில் தன் வாழ்க்கையை திரைப்படமாக்கக் கேட்டபோது, அதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டு 1957ல் ஹாங்காங் சென்றார். தாய்வானில் சீனாவுக்கு மிக நெருக்கமான பகுதி அது. கம்யூனிஸத்துக்கு தப்பும்படி அங்கு இருந்த அநேக சீன அகதிகளுக்கு உதவி செய்து அனாதை விடுதிகள், மிஷன் இல்லங்களை கிளாடிஸ் நடத்தினார்.  

1970 ஆம் ஆண்டு, ஜலதோஷத்தினால் மிகவும் கஷ்டப்பட்டார் கிளாடிஸ். ஒரு பெண்கள் கூட்டத்தில் அவர் புத்தாண்டு செய்தி கொடுத்துவிட்டு அதிக களைப்போடு திரும்பி வந்தார். அன்றே பெலமான நித்தியமான நகரம் நோக்கி பிரயாணம் புறப்பட்டுவிட்டார்! 'கிளாடிஸ் மரித்துவிட்டார்" என்ற செய்தி டீடீஊ மூலம் உலகிற்கு அறிவிக்கப்பட்டது. சீனர்கள் கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை நீண்ட வரிசையில் வந்து பார்த்துச் சென்றனர். பல ஆண்டுகள் தங்கியிருந்து நேசித்து சேவை செய்த யாங்செங்கை நோக்கியிருக்கும் ஒரு மலைக்குன்றின் மேல் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. 'உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்" என்ற தேவன் அவர் இறப்பிற்குப் பின் 'கிளாடிஸ் அயில்வார்டு" பெயரில் கல்வி நிலையங்கள், சேவை மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எழும்பப் பண்ணினார்! நாமும் கிறிஸ்துவின் இராஜ்ய பணியில் எதையும் சாதிக்கமுடியும் என்று நமக்கு கிளாடிஸ் அம்மையார் சவால்விடுகிறார்! அப்படித்தானே குட்டீஸ்?



August 2026


ஹாய் செல்லங்களே!  நீங்க இயேசப்பாவுக்கு தேவைப்படுறீங்க தெரியுமா? கடந்த 20ஆம் நூற்றாண்டில், சீன தேசத்தையே திருப்பிப் பார்க்க வைத்த ஒரு பெண்ணைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். சீன தேசம் இன்று பலவிதங்களில் பெரும் உயரங்களைத் தொட்டதற்கு இவரைப் போன்றோர் தான் காரணம்.

                கிளாடிஸ் உற்சாக ஆவியும் விடாமுயற்சியும் உள்ளவர். சுத்தம், சுகாதாரம், கஷ்டங்களைச் சமாளிப்பது, விருந்தினரை உபசரிப்பது, ஏழை எளியவர்க்குச் சேவை செய்வது மற்றும் சகல நன்னடத்தையிலும் கெட்டிக்காரி. ஆனால், ஸ்கூல் பாடம் என்று வந்துவிட்டாலோ சுருங்கிப்போய்விடுவார்; கணக்குப் பாடம் பிடிக்காது. மற்றவரைப் போன்று நடித்துக்காட்டி விமர்சனம் செய்வதில் தேறினவர். வீட்டில் மூத்த மகளான இவர், படிப்பு வராததால் 14 வயதிலேயே பெட்டிக் கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பின்னர் மளிகைக் கடை வேலை பறிபோனதால், குறைந்த ஊதியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக அதிக நேரம் வேலை செய்தார். லண்டன் மாநகரின் வீதிகளும், பெரும் விளக்குகளும், கேளிக்கை விடுதிகளும், பெரிய செல்வந்தர்கள் பகட்டாய் உடையணிந்து மிடுக்காய் நடைபோடுவதும் மற்றும் பார்களிலும் ஹோட்டல்களிலும் இருந்துவரும் இசைகளும் நடனங்களும் கூத்தாட்டங்களும் அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தன. தன் அத்தை மகள் குயினியுடன் சேர்ந்து நாடக அரங்குகளில் ரசித்து மகிழ்ந்தார். தானும் ஒரு நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

                ஒருநாள், ஓர் ஆலயத்தின் முன் நின்றிருந்த போது, சிலர் அவரை உள்ளே அழைத்துச் சென்றபோது, வேண்டா வெறுப்பாக சிரித்துக் கொண்டு, அரை மனதோடு உள்ளே சென்றார். 'நம் நினைவுகளையெல்லாம் உயிருள்ள ஆண்டவர் அறிவார். ஒரு நாளில் நாம் எல்லாவற்றிற்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். பாவிகளை நேசிக்கும் தேவன் பாவங்களை வெறுக்கிறார். நாம் திருந்தி வந்தால் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்" என்று ஏற்கனவே கேட்டிருந்த வார்த்தைகள் தான்; ஆனால், அன்று ஏதோ புதிதாய்த் தெரிந்தது. பயத்தோடு விரைவாய் எழுந்து வெளியே செல்லும் போது, வாசலில் நின்ற போதகர், 'கிளாடிஸ் நீ தேவனுக்கு தேவைப்படுகிறாய்" என்று சொன்னபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள் கிளாடிஸ். மீண்டும் போதகர் கிளாடிசை நோக்கி, 'உனக்கு ஒருவேளை தேவன் தேவையில்லை; ஆனால், அவருக்கு நீ தேவை!" என்றார். 

                ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போன்ற குற்ற உணர்ச்சியுடன் மனதில் பெரும் போராட்டம். போதகரின் மனைவி அவருக்கு தெளிவான ஆலோசனைகள் தந்தபோது, 'ஜீவ காலமெல்லாம் உமக்கே என்னைத் தருகிறேன்" என்று அர்ப்பணித்து இரட்சிப்பின் வழியில் நடக்க ஆரம்பித்துவிட்டார் கிளாடிஸ். சினிமா போன்ற கேளிக்கை வாழ்க்கை நின்றுபோய், ஆலய ஆராதனைகள் மற்றும் ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டு தன் சாட்சியைப் பகர்வதின் மூலம், அநேகருக்கு ஆசீர்வாதமான பாத்திரமாக மாறினார். 

                ஒருமுறை, கையில் செய்தித் தாளுடன் பஸ்ஸில் பயணம் செய்தபோது, 'மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், இரயில்கள், ஆகாயவிமானங்கள் என்று மேல்நாட்டு நாகரீகத்திற்கு சீனா திறந்திருக்கிறது" என்ற செய்தியினை வாசித்தார். ஆனால், அங்கோ இலட்சக்கணக்கானவர்கள் இன்னும் சுவிசேஷத்தை கேள்விப்படவேயில்லை; இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்கத் தொடங்கினார். இதற்குப்பின் அவரது எண்ணமெல்லாம் சீனாவைப் பற்றியே இருந்தது. ஒருநாள், தந்தை, 'சீனா, சீனா என்று சொல்லுகிறாயே, நீ அங்கு போய் என்னசெய்யப் போகின்றாய்? நீ என்ன நர்சா அல்லது டீச்சரா மிஷனரியாக சீனாவுக்குப் போக? பின்னே சீனாவில் என்னத்தை சாதிக்கப் போகிறாய்? உன்னால் இதைப்பற்றி பேசமட்டும் தான் முடியுமேயன்றி வேறொன்றும் முடியாது" என்றார். ஏளனமான இந்த வார்த்தைகள் கிளாடிஸின் இதயத்தைத் துளைத்தன.  

                1930 ஆம் ஆண்டு ஹட்சன் டெய்லரால் ஸ்தாபிக்கப்பட்ட 'சீன உள்நாட்டு மிஷன்"-க்கு விண்ணப்பித்தார். 18 வயதில் இரட்சிக்கப்பட்ட இவர் 28 வயதில் 24 பேரோடு ஹைபரி என்ற இடத்தில் பெண்கள் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சீனா செல்லவேண்டுமானால் பிரயாணம் ஒருமாத காலத்திற்கு மேல் ஆகலாம். அங்கு போன பிறகு 7 ஆண்டுகள் கழித்துதான் தாய் நாடு திரும்பமுடியும்; பணக்கஷ்டம், வைத்திய வசதிக் குறைவு, ஆபத்துக்களில் போலீஸ் பாதுகாப்பின்மை ஆகியவற்றை அனுபவிக்கவேண்டும். இதெல்லாம் அவரை பின்னோக்கித் திருப்பிவிடாதபடி மனதை உறுதியாகத் திடப்படுத்தவே உதவின. வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை சரியாகப் புரியமுடியவில்லை, குறிப்பெடுக்கவும் தெரியவில்லை. பக்கத்திலிருப்போரின் உதவியோடு எப்படியோ எழுதிவிடுவார் கிளாடிஸ். ஆனால், இறுதி முடிவோ கிளாடிஸ்க்கு எதிரான ரிசல்ட். தொடர்ந்து மேற்பயிற்சிக்கு தகுதியற்றவரானார். சீன மொழி கடினமானது அதைக் கற்றுக்கொண்டு வெளிநாட்டினர் பேசுவது அரிதிலும் அரிது. எனவே சீனாவை மறந்துவிட்டு இங்கேயே ஊழியம் செய் என்று பலர் வெறுப்பேற்றினர். வேறெந்த நோக்கமோ திட்டமோ இல்லாமல் ஏமாற்றத்தோடு வெளியேற்றப்பட்டார் கிளாடிஸ். 

                சீனாவில் மிஷனரிகளாக வாழ்ந்து திரும்பி வந்திருந்த வயதான தமபதிகளுக்கு சேவை செய்தும் அவர்களிடமிருந்து சீன நாட்டைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தும் சில காலம் பணிசெய்தார். வேறுயாரும் தன்னை சீனாவிற்கு அனுப்பாவிட்டாலும் தானே வேலை செய்து கிடைக்கும் பணத்தில் டிக்கெட் வாங்கி எப்படியும் சீனா போய்விடத் தீர்மானித்தார். ஒரு கூட்டத்தில் சந்தித்த நபர் மூலமாக சீனாவில் பல ஆண்டுகளாக மிஷனரியாக இருக்கும் 73 வயதான திருமதி. லாவ்சன் அம்மையாருக்கு ஓர் உதவியாள் தேவைப்படுகிறார் என்றறிந்ததும், 'அந்த ஆள் நான் தான்" என்று கிளாடிஸ் சொல்லிக் கொண்டார். ஆம், 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15 லிவர்பூல் தெரு ரயில் நிலையத்திலிருந்து வாழ்க்கையின் இலக்கை நிறைவேற்ற சீனாவை நோக்கி கிளாடிஸின் மிஷனரிப் பயணம் தொடங்கியது. அந்நாட்களில் யுத்தம் நடந்துகொண்டிருந்ததால், இடையிடையே ரயில்கள் நிறுத்தப்பட்டதோடு, வேறு பாஷைகளும் தெரியாமல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டவராய், திருமதி. ஜீனி லாவ்சன் அம்மையார் இருக்கும் யாங்செங் வந்தார். இடிந்த கட்டிடங்களும் மற்றும் குப்பைமேடுகளும் நிறைந்ததாகப் பராமரிக்கப்படாமல் அந்த இடம் இருந்தது. நீ யாரம்மா? உள்ளே வர விரும்புகிறாயா? என்று மெலிந்த உருவத்தில் இருந்த வயதான லாவ்சன் அம்மையார் கேட்டார். கிளாடிஸை அழைத்துவர தன் உதவியாளர் லூ என்பவரை அவர் அனுப்பியிருந்தாலும், எல்லாவற்றையும் லாவ்சன் அப்போது மறந்துவிட்டார்.

                திருமதி. லாவ்சன் புதிய உத்திகளைக் கையாண்டு, தன்னுடைய மிஷன் வளாகத்தை ஒரு லாட்ஜ் போல வைத்திருந்தார். வியாபாரிகள் அந்த மலைகளில் வியாபாரப் பொருட்களை கோவேறு கழுதைகளில் ஏற்றிக்கொண்டு போகும் வழியில் இது அமைந்திருந்தது. பிரயாணக் களைப்பில் வியாபாரிகள் இப்படிப்பட்ட லாட்ஜ்களில் தங்கி இளைப்பாறி, உணவு உண்டு பின் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வர். அப்படி வருவோருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை கதைகள், பஜனை மற்றும் நாடக பாணியில் நடித்துக்காட்டி, படங்களையும் காட்டி நேரம் போவதே தெரியாதபடி அவர்களை மகிழ்ச்சியாக்கிவந்தார் அவர். கிளாடிஸ்க்கு கொடுக்கப்பட்ட வேலையோ,  'வாசலில் நின்று விளம்பரம் செய்வது போல் அவ்வழியே வரும் பிரயாணிகளை நிறுத்தி, 'வாங்க வாங்க! இங்கே தங்குவதற்கு நல்ல விசாலமான அறைகளுடன் இடமுண்டு!" என்று கூவி அழைப்பதே. சீன மொழியை முறையாகக் கற்றுக்கொள்ள முடியாமல், தெருப் பிள்ளைகளுடன் உறவாடி கொஞ்சமாகப் பேசக் கற்றுக்கொண்டு, அங்குள்ள உணவை உண்டு, சீனர்களைப் போலவே உடையணிந்து, அவர்களில் ஒருவரானார். இந்நிலையில் திருமதி. லாவ்சன் மரித்துவிட, கிளாடிஸ்க்கு பண உதவிகள் கிடைக்கவில்லை, ஏற்கனவே வந்துகொண்டிருந்த உதவிகள் நிறுத்தப்பட்டன.

                                                                                                                                                                                                                                                                                                      - தொடரும்


July 2026

 

ஹாய் குட்டீஸ்! அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், பெரிய நிலைகளில் நல்ல வேலைகளில் அமர்ந்து நன்றாயிருக்கவேண்டும் என்பதற்காகவும் தான் நீங்கள் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் படிக்கிறீர்கள்; அப்படித்தானே சுட்டிப்பிள்ளைகளே!

அதைவிட முக்கியமாக, வேத அறிவு நமக்குச் சரியாக இல்லாவிட்டால், அது தீமைகள் அனைத்திற்கும் வேராய் அமைந்துவிடுவதோடு, மற்றவர்கள் நம்மை ஏமாற்றி இழுத்துச் செல்வதற்கும் காரணமாகிவிடும். சரியான, தெளிவான சத்தியத்தை போதனை செய்தபடியால், சபைக்குப் புறம்பாக்கப்பட்டு இரத்தசாட்சிகளானோர் ஏராளம்! சத்தியத்தைக் கூறுபவர்களைக் கட்டி வைக்கலாம், சுட்டெரிக்கலாம்; ஆனால், சத்தியத்தைக் கட்டிவைக்கவும் முடியாது, சுட்டெரிக்கவும் முடியாது. சத்தியத்திற்காக சுட்டெரிக்கப்பட்டு இரத்தசாட்சியான ஒருவரைப்பற்றி இங்கே பார்க்கலாம். 

பொஹிமியா என்ற நாட்டில் ஹஸ்ஸினெட்ஸ் என்ற கிராமத்தில் பிறந்தார் ஜாண் ஹஸ். பள்ளிப் படிப்பு முடித்ததும், செக்கொஸ்லோவேக்கியாவின் பிரேகு (Pregue)  பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து அங்கே போதகரானார். உருவ வழிபாடு, பாவமன்னிப்புச் சீட்டு, பாதிரிமார்களின் ஆடம்பரமானப் பண ஆசைப் பிடித்த போலி வாழ்க்கை போன்றவைகளை எதிர்த்தார். சத்தியத்தை நன்கு அறிந்து, அவைகளை மக்களிடம் துணிந்து அறிவித்ததினால், மக்கள் சரியான சத்தியத்தில் வளர்ந்து வருவதைச் சகிக்காத கத்தோலிக்கத் தலைவர்கள் கொதித்தனர், வேதத்தை படிக்கத் தடை விதித்தனர்; கொலை செய்யவும் சதித் திட்டம் தீட்டினர். என்றபோதிலும், அது அவர்களின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை மாறாக ஊக்கத்தை அதிகரிக்கச் செய்தது.  

ஜாண் ஹஸ் மிகத்தீவிரமாக ஊழியம் செய்தபோது ஆர்ச் பிஷப்போ அவரை ஒழித்துவிடத் தீவிரமானார். ரோம் நகரில் போப்பால் கூட்டப்பட்ட விசாரணைக்கு அவரை அழைத்து வரும் வழியில் மறைவான முறையில் தாக்கி சிறையில் தள்ளக் கட்டளையிட்டார். அவர் போக மறுத்தபோது சபைக்குப் புறம்பாக்கப்பட்டார். இருளான சிறைபோன்ற இடத்தில் கான்ஸ்டென்ஸ் என்ற பட்டணத்திற்குப் போகும்படி பணிக்கப்பட்டார்.  கான்ஸ்டென்ஸ்டனை அடைந்ததும் அவரைக் கைது செய்து விசாரணையின்றி கொன்றுவிடலாமென்று தீர்மானித்தனர். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்று எரிக்கப்படுவதற்கு பாத்திரவான் என்று அநியாயமாகத் தீர்ப்பளித்தனர். சிறிய இருட்டறையில் அடைத்து மிகக் கொடுமையாகத் துன்புறுத்தினர். பகல் வேளைகளில் கால்களை பலமான சங்கிலிகளால் கட்டி அங்குமிங்கும் நடக்க அசையமுடியாதபடிச் செய்தனர். இரவு வேளைகளில் படுத்துத் தூங்க முடியாதபடி உயரமான சுவரில் வளையங்களில் கைகளை கட்டிவிட்டனர். ஜாண் ஹஸ் கண்ணீர் நிறைந்த கண்களுடன், ''நான் சபையின் விசுவாசத்திற்கும் தேவனுடைய சத்தியத்திற்கும் விரோதமாக இதுவரை ஒன்றும் பேசினதில்லை. இதற்கு தேவனே சாட்சி."" என்று அமைதியாகச் சொன்னார். வந்தவர்கள் வாயடைத்துப்போய் வியப்புற்று எதுவும் பேசமுடியாமல் போய்விட்டனர்.  

கடைசி முறையாக 1415 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி மறுதலித்துவிட மீண்டும் மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டது. 'நான் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன்" என்றார் திட்டவட்டமாக. 'இவன் அதிக பிடிவாதமும் முரட்டாட்டமும் உள்ளவன். இவனை எல்லார் முன்பும் வைத்து அவமானப்படுத்தி சுட்டெரிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்" என்று தீர்ப்பளித்ததும், 'கர்த்தாவே உம்முடைய மிகுந்த இரக்கத்தினிமித்தம் இந்த அநியாயத்தை மன்னியும்;;; உமது கிருபை இவர்களை இரத்தப்பழியினின்று விடுவிப்பதாக" என்று ஸ்தேவானைப் போல ஜெபித்தார்.  முரட்டுத்தனமாக அவர் போட்டிருந்த குருத்துவ அங்கியை கழற்றி அவர் தலையில் பிசாசுகளின் படம் வரையப்பட்ட குல்லாவை வைத்து ''பக்தர்களின் தலைவன்"" என்று அவரை ஏளனம் செய்தனர். இத்தனை அவமானங்களுக்கு மத்தியிலும் ஒருவித வருத்தமுமின்றி அவர் முகத்தில் காணப்பட்ட பிரகாசமும் அமைதியும், அவர் கர்த்தரைச் சந்திக்கவும் நித்தியத்தை அடையவும் எவ்வளவாய் ஆயத்தத்துடன் இருந்தாரென்பதைக் காட்டுகிறது. 

இரண்டு நாட்கள் கழித்து ஜூலை 6 ஆம் தேதி அவரை பட்டணத்திற்கு வெளியே சுட்டெரிப்பதற்கு அழைத்துச் சென்றனர். ஒரு திருமண விருந்திற்குச் செல்வதைப் போல நெருப்புக்குத் தன்னை ஆயத்தம் செய்தார். குறித்த இடத்தை அடைந்ததும் அவர் முழங்காற்படியிட்டு வேதத்திலுள்ள சில சங்கீதங்களைப் பாராமல் பாடினார். பின்னர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, ''என் கர்த்தாவே! உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். நீர் என்னை இரட்சித்திருக்கிறீர்."" (சங்கீதம் 31:5) என்றார். சேவகர்கள் அவரைச் சங்கிலிகள் கொண்டு கம்பத்தோடு சேர்த்துக் கட்டியபோது, ''என் ஆண்டவர் இயேசு இதைக் காட்டிலும் கடினமான சங்கிலிகள் கொண்டு கட்டப்பட்டாரே! நான் ஏன் இந்த துருபிடித்தச் சங்கிலிகளைக் குறித்து வெட்கப்படவேண்டும்?"" என்று புன்சிரிப்போடு சொன்னார். அவரைச்சுற்றி கழுத்துவரையிலும் வைக்கோலும் விறகுகட்டைகளையும் அடுக்கும் சமயத்திலும் விரோதிகள் அவரை மறுதலிக்கச் செய்ய பெரிதும் முயன்றனர். ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, ''நான் தீமையான எதையும் இதுவரை போதித்ததில்லை. நான் இதுவரை என் வாயினால் கற்பித்த சத்தியங்களை என் இரத்தத்தினால் இப்போது முத்திரிக்கப் போகிறேன்."" என்றார். 'ஒரு பெண் அன்னம்  (Goose)  போன்ற என்னைத்தான் கொளுத்தப்போகிறீர்கள்; ஆனால், நூறு ஆண்டுகளுக்குள் எழும்பப்போகும் அன்னத்தை  (Swan)  உங்களால் ஒன்றும் செய்ய முடியாது." என்றார்.

கட்டைகளுக்கு தீ வைத்ததும் ஜாண் ஹஸ் சத்தமாக ஒரு பாட்டைப் பாடினார். அப்பாட்டைப் பாடி முடிப்பதற்குள்ளாகவே தீ அவரை விழுங்கிற்று. ஆனால் அத்தீயால் அழிக்கப்பட முடியாத அவருடைய ஆவியோ தந்த ஆண்டவர் இயேசுவிடம் பரத்தை நோக்கி விரைந்து சென்று இரட்சகர் இயேசுவின் கரங்களில் அடைக்கலம் பெற்றது! கடலில் கரைக்கப்பட்ட அவரது சாம்பல் உலகமெங்கும் சென்று சத்தியத்திற்கு சாட்சி பகருகின்றது!! 

அன்பான செல்லப்பிள்ளைகளே! சத்தியத்திற்காக ஜீவனையும் பணயம் வைத்து எதையும் எதிர்பாராமல் துணிந்து நின்றோர் வழியில் சென்று செயல்படுவோமா? 


June 2026

 


ஹாய் தம்பி தங்கையே!

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இங்கிலாந்து நாட்டில் பயிற்சி பெற்ற நர்சுகள் இல்லாத நாட்கள் அவை. அந்நாட்களில், 'என் வாழ்நாள் முழுவதும் நோயுற்றோருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தொண்டுசெய்து, மனிதர்களின் துயரத்தைக் குறைக்கும் செவிலியர் பணி செய்து வாழ்வதாகவே இருக்கும்;. அதுவே நான் இயேசுவுக்கு செய்யும் சேவை என்று விசுவாசிக்கிறேன்" என்று தன் இளம் வயதில் அர்ப்பணித்தார் ஆக்னஸ் எலிசபெத் ஜோன்ஸ். 

1832 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று அயர்லாந்தின் ஃபாஹான்  (Fahan) என்ற கிராமத்தில் பிறந்தார் இவர். தேவ பக்தியுள்ள ஆக்னஸின் தந்தை, தேவபயத்தை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்ததோடு, தேவனையும் அவர் சேவையையும் நேசிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தினார். 1850-ல் தந்தையின் மறைவு இவர்களை டப்லின் பட்டணத்திற்கு குடிபெயரச்செய்தது. எனினும், தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டதினால் மீண்டும் சொந்த ஊரான ஃபாஹானுக்குத் திரும்பினர். நர்ஸ் தொழில் செய்வதை ஒரு கீழ் மட்டத் தொழிலாகவே இங்கிலாந்து மக்கள் அப்போது பார்த்தனர். எனினும், 24 வயதான ஆக்னஸ், அங்குள்ள மக்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்ளூ தீக்காயங்களுக்கு எந்த கட்டணமுமின்றி மருத்துவம் பார்ப்பதில் தேறினவர் அவர். தேவ அன்பினால் நெருக்கப்பட்டவராக, ஒரு சேவையாகவே இதைச் செய்துவந்தார். 

அதுமாத்திரமல்ல, துண்டுப்பிரதிகளையும் கொடுத்து சுவிசேஷம் சொல்லி மக்களுக்காக ஜெபித்துவந்தார்ளூ அவர்களில் ஒருவராக மாறினார் ஆக்னஸ். நீண்ட தூரப் பயணத்தினால் உண்டான களைப்பிலும், ஊழியத்தில் அவருக்குக் கிடைத்த மகிழ்ச்சி அவரை மேலும் உற்சாகப்படுத்தியது. வீடுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி அவர்களை ஆவிக்குரிய வழிகளில் நடத்திவந்தார். அந்நாட்களில், கிறிஸ்தவ நர்ஸாக இருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரைப் போலவே திருமணமின்றி வாழ தன்னை அர்ப்பணித்தார். 1860-ம் ஆண்டு, 'சிஸ்டர்" ஊழியப் பயிற்சிக்காகச் சென்றபோது, இரண்டு ஆண்டுகள் நர்சிங் பயிற்சியையும் முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே பயிற்சி பெற்றவர்களுள், ஆக்னஸ் தனித்து மிகவும் சிறப்பான முன்மாதிரியானவராக அனைவரின் கவனத்தையம் ஈர்த்தார். பயிற்சியோடு நோயாளிகளையும் அன்போடு விசாரித்து பராமரித்து உதவிசெய்வதில் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர்.

1861-ல் லண்டன் சென்று, வேதாகமப் பெண்கள் பணியில் இணைந்து, வேதபாடம் நடத்தும் பொறுப்பாளராக, ஆஸ்பத்திரிகளிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தாய்மார் மற்றும் பெண்களுக்கு வேதபாட வகுப்புகள் நடத்தினார். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் ஆரம்பித்த செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியின் நர்சிங் காலேஜில், தனது தரிசனத்தின் பாதையில் 1862-ல் இணைந்தார். 1865-ம் ஆண்டு, லிவர்பூலில் உள்ள மருத்துவமனையில், கைவிடப்பட்ட மற்றும் சாகும் தருவாயில் உள்ள நோயாளிகள் மத்தியில், பணிசெய்ய அழைக்கப்பட்டபோது, மறுப்பின்றி வெறுப்பின்றி அதனை ஏற்றுக்கொண்டார். பலவித தீமைகளினால் தங்கள் சுகத்தைக் கெடுத்து, உணவுபற்றாக் குறையினால் மெலிந்து தேய்ந்தவர்கள், சுகாதாரமற்றக் குடிநீரால் சுகாதாரமற்ற வாழ்க்கையினால் சீரழிந்தவர்கள் இவர்களுக்குத் தான் இங்கே அடைக்கலம். இவர்களது மிகவும் சவாலான இந்த நிலைமையைப் பார்த்த ஆக்னஸ் சோர்ந்துபோய்விடவில்லை. மாறாக, இயேசுவின் மனதுருக்கம் கொண்டவராய் ஊழியத்தைத் தொடர்ந்தார். 

ஆக்னஸ் பொறுப்பெடுத்த முதல் நாளிலிருந்து பெரிய மாற்றங்கள் அங்கே நிகழ ஆரம்பித்தன. பயிற்சி பெற்ற அநேக நர்சுகளை அங்கே வேலையில் அமர்த்தி, மருத்துவ சேவையின் தரத்தையும் உயர்த்தினார். நோயாளிகளை மிகவும் அன்போடு விசாரித்து, நல்ல சுவையான உணவுகளைக் கொடுத்து பராமரித்தார். அதுவரை அங்கே வந்த நோயாளிகள், நோய் குணமாகாமல் செத்துமடிந்த நிலை மாறி, ஆத்துமாவிலும் சரீரத்திலும் சுகம் பெற்று வீடு திரும்ப ஆரம்பித்தனர். ஒவ்வொரு நோயாளியும் தேவனின் படைப்பாக இருப்பதால், அவர்களுக்கு சேவை செய்வதை ஒரு புனித பணியாகவே அவர் கருதினார். இவரது இந்த மனப்பான்மை, மருத்துவமனையில் பணிபுரிந்த மற்ற நர்ஸ்களுக்கும் ஊக்கமாக அமைந்ததுளூ பல மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்தது. நைட்டிங்கேல் அம்மையார் ஆக்னஸின் ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பைக் கவனித்து, அவரை மிகவும் பாராட்டினார்.

அதிகாலையிலேயே எழும்பி, ஜெபித்து, காலை 5:30 மணிக்கு தொடங்கும் அவரது ஓட்டம், தினமும் இரவு 11:00 மணி வரை தொடர்ந்தது. நீண்ட நேரம், ஓய்வில்லாமல் நோயாளிகளின் நலனுக்காக, தன் உடல் நலத்தைக் கூட கவனிக்காமல் செய்த அயராத கடின உழைப்பு, அவரது சரீரத்தைப் பாதித்தது. டைபாயிடு ஜூரம் பரவிக்கொண்டிருந்த அந்நாட்களில், ஆக்னஸ்-ம் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார்ளூ இரண்டு வார போராட்டத்திற்குப் பின், 1868 பிப்ரவரி 19 அன்று தனது 35-வது வயதிலேயே  தன் ஓட்டத்தை வெற்றியோடு முடித்து நேசரின் மார்பில் சாய்ந்தார். ஆக்னஸ் மரித்த செய்தியைக் கேட்ட நோயாளிகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 

  அன்பான குட்டிப்பிள்ளைகளே! ''எங்களைக் காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா?"" என்று ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு நீங்களும் ஆக்னஸ் போல செயல்படமுடியுமா?

March 2026

 















மிஷனரியாகச் செல்லவேண்டும் என்ற விருப்பத்துடன் தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ் முல்லரைக் குறித்து சென்ற இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில் அவரது விசுவாச வாழ்க்கையைக் குறித்து மேலும் அறிந்துகொள்வோமா?

யுனிவர்சிட்டியில் தான் பயின்றுகொண்டிருந்த நாட்களில், ஆரம்பமுதலே தனது தேவைகள் தேவனால் அற்புதமாகச் சந்திக்கப்படுவதை உணர்ந்த ஜார்ஜ் முல்லர், விசுவாசத்தில் ஒருநாளும் பின்வாங்கிப் போகவில்லை. கைப்பிரதிகள் மற்றும் நற்செய்தி நூல்கள் வாயிலாக இரட்சிப்பின் செய்தியைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்; அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயம் செய்தார். தேவனைத் துதிப்பதற்காகவும், வேதத்தைத் தியானிப்பதற்காகவும் மற்றும் ஜெபிப்பதற்காகவும் அநேகர் முல்லரைத் தேடிவந்தனர். முல்லர் யுனிவர்சிட்டியிலிருந்து வெளியேறும்போது, ஒரு சிறு ஊழியர் கூட்டத்தையே ஆயத்தப்படுத்திவிட்டுத்தான் சென்றார்.

1827-ல் ருமேனியா நாட்டில் ஜெர்மானியர்களுக்கு ஊழியம் செய்யும்படி அவர் ஆயத்தப்பட்டபோது, திடீரென்று ஏற்பட்ட போரின் காரணமாக அது கைகூடவில்லை. எனவே, யூதர்கள் மத்தியில் மிஷனரியாகச் செல்ல தீர்மானித்தார். லண்டன் மாநகர் சென்று பயிற்சியும் பெற்றார். 1829-ல், தனது 24 ஆம் வயதில், லண்டனில் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் கடுமையாக உழைத்து எபிரேய மற்றும் ஆங்கில மொழிகளை அவர் கற்கவேண்டியிருந்தது. பயிற்சி முடியும்வரை காத்திராமல், லண்டனின் யூதக் குடியிருப்புகளுக்குச் சென்று தெருப்பிரசங்கம் செய்து, 50 சிறுவர்களைக் கூட்டி வேதபாடவகுப்புகள் நடத்திவந்தார். 

எக்ஸெடர் என்ற இடத்தில் இவர் ஊழியம் செய்தபோது, இவரது விசுவாச வாழ்க்கையினால் தொடப்பட்ட மேரி குரோவ்ஸ் என்பவருடன், 1830 அக்டோபர் 7 ஆம் தேதி தனது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். முல்லரின் வைராக்கியமான ஊழியத்திற்கும் மற்றும் விசுவாச ஊழியத்திற்கும் உறுதுணையாயிருக்க தன்னை ஒப்புக்கொடுத்தவர் மேரி. முல்லர் தம்பதியர் தங்கள் தேவைகளுக்காக கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருந்தனர். சிலவேளைகளில் உணவு இல்லாமல்; அவர்கள் விசுவாசம் வெகுவாகச் சோதிக்கப்பட்டாலும், அவர்கள் மனம் தளர்ந்துபோய்விடவில்லை. அதே வேளை, தேவைக்கு அதிகமாக கிடைத்துவிட்டால், மேரி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்தளித்துவிடுவார். அன்றன்று தேவையான அப்பமே போதும் என்ற விசுவாச வாழ்க்கையே வாழ்ந்தார்கள் முல்லர் தம்பதியர். 1832-ல், முல்லரின் நெருங்கிய நண்பரான ஹென்றி கிரெய்க், முல்லரிடம் பிரிஸ்டல் நகரின் ஆவிக்குரிய நிலை குறித்தும் மற்றும் அதன் தேவைகள் குறித்தும் பகிர்ந்ததோடு, முல்லரும் தம்மோடு இணைந்து அங்கே ஊழியம் செய்தால் நலமாயிருக்கும் என்ற தனது விருப்பத்தையும் அவரிடம் தெரிவித்தார். தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தாமதிக்காமல் பிரிஸ்டல் நகர் நோக்கி புறப்பட்ட அந்தப் பயணம், பிற்காலங்களில் பிரிஸ்டலை மையமாகக் கொண்டே அவர் ஊழியம் எழும்பப்போகிறது என்பதற்கு வழிகாட்டியது. 

அப்போது, பெரும் சோதனை அலைபோல் மோதியடித்தது. அந்நாட்களில் காலரா நோய் மிக வேகமாகப் பரவி உயிர்களைக் கொள்ளைகொண்டது, வெப்பம் மிகக் கடுமையானது, எண்ணற்ற மக்கள் மடிந்துகொண்டிருந்தனர். எனினும், தனது சுகத்தை துச்சமாகக் கருதி, மரித்துக்கொண்டிருந்த அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தினார் முல்லர். இச்சூழலில் முல்லர் தம்பதியருக்கு லிடியா என்ற அன்பு மகள் பிறந்தாள். 

'தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாய் இருக்கிறார்" என்ற வசனத்தை வாசித்தபோது, இப்படிப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்குக் கிடைத்தது. பிரிஸ்டலின் சேரிப்பகுதிகளில் எண்ணற்ற சிறுவர் சிறுமியர் படிப்பறிவில்லாமல் வாழ்க்கையை வீணாக்கியதோடு, உணவு பற்றாக்குறையோடும் காணப்பட்டதைக் கண்ட முல்லர், ஒரே ஒரு ஷில்லிங் மாத்திரமே கையில் இருந்தபோதிலும், விசுவாசத்தோடு இவ்ஊழியத்தைத் துவங்கினார். முல்லர் குடும்பத்தில் இரண்டாம் மகன் பிறந்தபோது, குடும்பத்தின் தேவைகளுக்குக்கூட பணம் இல்லைதான்; இருப்பினும், தன்னுடைய தேவைகளை தேவனின் கரங்களில் வைத்துவிட்டு, விசுவாசத்தோடு காத்திருந்தார். 20 பவுண்ட்கள் கிடைத்தால், இலவசமாக வேதாகமங்களை மக்களுக்கு கொடுக்கலாம் என்று நினைத்தார்; அன்றே ஒரு பெண் முலம் அது கிடைத்தது. அற்புதமான துவக்கம், அத்தோடு ஊழியமும் படிப்படியாக உயர்ந்து ஏழை மாணவர்களுக்கான பகல் நேர கிறிஸ்தவப் பள்ளியும் தொடங்கப்பட்டது. 

அனாதை விடுதி என்பது இங்கிலாந்தில் அறியப்படாததாகவே இருந்த அந்நாட்களில், பகல் நேரப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் யாராவது அனாதைகளானால், காவலர்கள் அவர்களை பிச்சைக்கார விடுதிகளில் போட்டுவிடுவார்கள். எனவே, சிறு சிறு விடுதிகள் அமைத்து உணவு உடை கொடுக்கப்பட்டால் மாத்திரமே அவர்களைக் காப்பாற்றமுடியும் என்று முல்லர் யோசித்தபோது, உதவி செய்ய முன்வருவார் யாரும் இல்லை. என்றபோதிலும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுண்டோ..? அப்போது ஏ. எச். பிராங்க் என்பவரின் வாழ்க்கை வரலாற்று நூல் முல்லரின் கையில் கிடைக்க, தேவன் அவரை எப்படியாய் ஏழைப் பிள்ளைகளைப் பராமரிக்கச் செய்தார் என்றும், முல்லர் அவரது ஹோமில் இரண்டுமாத காலம்  தங்கியிருந்ததையும் நினைவுகூர்ந்தார். வேதத்தை திறந்தார், 'வாயை விரிவாய்த் திற நான் அதை நிரப்புவேன்" என்ற வசனம் பளிச்சென்று அவரது கண்ணில் பட்டது; விசுவாசம் துளிர்த்து வளர்ந்தது. தேவனைத் துதித்தார் முல்லர். ஐந்தாம் நாள், 'தங்கள் வீட்டுச் சாமான்களை விடுதிக்காக கொடுப்பதோடு, தாங்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி விடுதியில் பணிசெய்ய விரும்புவதாக ஒரு விசுவாசத் தம்பதியர் கடிதம் எழுதியிருந்தனர். 30 ஏப்ரல் 1836-ல் 30 சிறுமிகளுடன் ஹோம் ஆரம்பமானது. அன்றாடத் தேவைகளை தேவன் அற்புதமாகப் பூர்த்தி செய்தார்; தனது தேவைகளை அவர் வெளியே யாரிடமும் கேடடதில்லை. விசுவாசத்தில் பின்வாங்கவில்லை! கடன்பட்டதில்லை! பிள்ளைகளுக்குத் தேவையான உணவுகளும் உடைகளும் கிடைக்காமல் இருந்ததும் இல்லை!! வற்றிப்போகாத விசுவாசத்தினால் அற்புதமாக விடுதிகள் பராமரிக்கப்பட்டன!!! பதிலளிக்கப்பட்ட ஜெபங்களே இவ்விடுதிகளின் வரலாறு. 

திடீரென்று முல்லருக்கு ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. 1842 பிப்ரவரி மாதம் அது, ஜெபித்துவிட்டு முல்லர் தூங்கிவிட்டார். ஆனால், உறங்காத தேவனோ பார்த்துக்கொண்டேயிருந்தார். காலை நேரம் அது, தொழிலதிபர் ஒருவர் தன் அலுவலகம் நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தார்; ஆனால், முல்லரின் விடுதியைத் தாண்டி அவரால் செல்லமுடியவில்லை. திரும்பி வரும்போது கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்று நினைத்தவராக மீண்டும் நடக்க ஆரம்பித்தார்; ஆனால் அவரது கால்கள் போகவில்லை. தேவன் அவரை நெருக்கி ஏவினதால், உடனே கீழ்ப்படிந்து கொடுத்த பின் தான் அவரால் அங்கிருந்து நகர முடிந்தது. 

ஒருநாள் காலை, உணவிற்காக மேஜையில் தட்டுகளும், கிண்ணங்களும், கரண்டிகளும் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் உணவு? பிள்ளைகள் உணவிற்காக ஜெபித்து முடித்து கண்களைத் திறந்தபோது, கதவு தட்டப்பட, அங்கே ரொட்டிக் கடைக்காரர் ரொட்டிகளுடன் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் கதவு தட்டப்பட பால்காரர் வண்டி பழுதானதினால், பாலைக் கொடுக்கும்படியாக நின்றுகொண்டிருந்தார். அந்நாட்களில், 'பிள்ளைகளின் சத்தம் தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக" அத்தெருவில் குடியிருந்த ஒருவர் எழுதியிருந்தார். பிள்ளைகள் சுயாதீனமாகப் படிக்கவும், ஓடிவிளையாடவும் வில்சன் தெரு வீடுகளில் இடமும் இல்லாதிருந்தது. அதுவரை விடுதிக்காக சொந்த கட்டிடம் கட்டுவதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை முல்லர். 300 சிறுவர்கள் தங்குவதற்கு கட்டிடங்களைக் கட்ட விசுவாசத்தோடு ஊக்கமாக ஜெபித்துவந்தார் முல்லர். முதலில் ஒரு விசுவாசி, 1000 பவுண்ட்கள் அனுப்ப, சில நாட்களில் லண்டனைச் சேர்ந்த ஒரு இஞ்சினியர் தான் எந்தவித ஊதியமும் பெறாமல் புதிய விடுதியின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டு முடித்துத் தருவதாக அங்கு வந்தார். பிரிஸ்டலுக்கு வெளியே ஆஷ்லி டௌன் என்ற குன்றுகள் நிறைந்த இடத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் கட்டிடப்பணி தொடங்கியது; தேவ கிருபையால் மூன்றே ஆண்டுகளில் முன்னூறு பிள்ளைகள் சுயாதீனமாகத் தங்கக்கூடிய ஹோம் கட்டி முடிக்கப்பட்டது. 1870 ஆம் ஆண்டு 2000 பிள்ளைகள் தங்கும்படியாக புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அந்த இடம் ஒரு சிறிய பட்டணம் போல் ஆனது. இந்நாட்களில், கணவரோடு 40 ஆண்டுகள் இணைபிரியாமல் சேவை செய்த மேரி முல்லர் இளைப்பாறுதலில் பிரவேசித்தார். 

ஒரு ஷில்லிங்கைக் கொண்டு அற்பமாக ஆரம்பமான இவ்வூழியம், ஆயிரக்கணக்கான அனாதைப் பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுத்ததோடு, முதியோர் இல்லங்கள், ஞாயிறுப் பள்ளிகள், பகல் நேரப்பள்ளிகள் என இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தியது. 189 மிஷனரிகளை தாங்கினார் முல்லர். தனது 70 ஆம் வயதில், விடுதிகளின் பொறுப்பை மகள் லிடியாவின் கணவர் ஜேம்ஸ் ரைட்டிடம் ஒப்படைத்துவிட்டு, அவரோ ஓய்வெடுக்காமல், உலகளாவிய நற்செய்திப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டார். இந்தியா உட்பட 42 நாடுகளில் 30 இலட்சம் மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார்.  வேதாகமத்தை ஒன்று இரண்டு முறையல்ல, 200 முறைகள் முழுவதுமாய் வாசித்து முடித்திருந்தார்; அதிலும், 100 முறைகள் முழங்காலிலேயே வாசித்திருந்தார். 1898 ஆம் ஆண்டு தனது 92 வயதிலும் ஓய்வின்றி செயல்பட்டு வந்தார். அனாதைகளின் அருமைத் தந்தையாய் ஆதரவற்றோரின் அடைக்கலமாய் வாழ்ந்த முல்லர், 1898-ம் ஆண்டு மார்ச் 9 மாலை படுக்கைக்குச் சென்றவர், காலையில் படுக்கையிலிருந்து எழாமல், நித்தியத்தைக் கழிக்கும்படியாகக் கர்த்தரிடம் சென்றார்! ஆண்டவரின் நாம மகிமைக்காக அரும்பெரும் காரியங்களைச் செய்து, வாழ்வில் ஒளி இழந்தோர்க்கு வழிகாட்டி, எதிர்காலம் பெறச் செய்தவர் முல்லர். அனாதை இல்லங்களை நடத்துவோருக்கு முன்னோடியாய் வாழ்ந்தவர்! அன்பான தம்பி தங்கைகளே! உங்களிடமிருந்தும் கூட இயேசு எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்! இல்லையா.




Feb 2026

 



ஹலோ கிட்ஸ்! உங்க பெற்றோர் மூலமாக நீங்க நிறைய நன்மைகளைப் பெற்றவங்க அப்படித்தானே...! ஏனென்றால், உலகத்தில் எத்தனையோ குழந்தைகள் அனாதைகளாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது அனாதை இல்லங்களிலும் விடுதிகளிலும் இருக்கிறார்கள். நீங்க கூட பண்டிகை நாட்களில் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும்போது இந்த ஹோம்களுக்குச் சென்று அவர்களோடு உங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். இந்த இதழில், விசுவாசத்தினால் அநேக அனாதை விடுதிகளை நிறுவி, எண்ணற்ற சிறுவர் சிறுமியருக்குத் தந்தையாக இருந்து ஆதரவளித்து, அவர்களுக்கு வேதத்தைப் போதித்து, கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய ஒரு அங்கிளைப் பற்றி பார்ப்போமா...?

    பாடல் வேளை முடிந்து எல்லாரும் முழங்கால்படியிட்டு ஜெபிக்கின்றனர்; ஆனால், வேதாகமக் கல்லூரியில் படிக்கும் ஜார்ஜ் முல்லருக்கு அது முடியவில்லை; அவர் ஆச்சரியப்படுகிறார். அந்த வல்லமையான ஜெபம் அவரை அசைத்ததோடு, தேவனோடு தன்னால் சரியாக ஐக்கியம் கொள்ளமுடியாததற்கு தன்னுடைய பாவங்களே காரணம் என்றும் உணரவைத்தது. அதுவரை வாழ்ந்து வந்த மோசமான வாழ்க்கையை எண்ணி மிகவும் வருந்தினார். அவரின் நெடுநாள் மனப்போராட்டத்திற்கு அங்கே விடுதலை கிடைத்தது.

                ஐரோப்பாவில் பிரஷியா என்ற நாட்டில் 1805 செப்டம்பர் 27- ல் ஜார்ஜ் முல்லர் பிறந்தார். ஜெர்மானியரான அவரது தகப்பனார் வரி வசூலிக்கும் ஓர் அரசு அதிகாரி. முல்லரின் தந்தை தேவைக்கு அதிகமான பணத்தை பிள்ளைகள் கையில் தந்ததால், அதை இஷ்டப்படி செலவு செய்து உல்லாசமாய் வாழ்ந்தார் முல்லர். இளம் பிராயத்திலேயே சீட்டு விளையாடுவது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டு பணத்தைத் தாறுமாறாகச் செலவு செய்து தன் தந்தையின் பாக்கெட்டிலும் கைவைத்ததோடு, அவர் சேர்த்து வைத்திருந்த அரசாங்கப் பணத்தையும் திருடி விளையாடினார். ஆலய ஆராதனையில் காணிக்கை போடுவதற்கு கொடுக்கப்படும் பணத்தையும் காணிக்கைப் பையில் போடாமல் அதையும் சூதாட்டத்தில்தான் செலவளிப்பார் என்றால் எப்படி என்று பாருங்களேன்..? ஒருநாள் மேஜையில் இருந்த சில கரன்சி நோட்டுக்களைத் திருடி அதைத் தன் ஷ_க்குள் வைத்துக் கொண்டு, தந்தை அங்கே வந்தபோது நல்லபிள்ளை போல் நடித்தார். அடிக்கடி பணம் திருடு போவதால் தன் மகனை சோதிக்கவே அவர் பணத்தை மேஜையில் வைத்திருந்தார். வசமாக மாட்டிக்கொண்ட முல்லருக்கு ~செம| அடிக்கிடைத்தும் மனம் மாறவில்லை.

        தன் மகன், பள்ளிப் படிப்பை முடித்து, வேதாகமக் கல்லூரியில் படித்து, பின் ஒரு அரசாங்க ஆதரவு பெற்ற லுத்தரன் சபை குருவானவராக ஆகிவிட்டால் வாழ்க்கையில் மிகவும் வசதியாக வாழலாம் என்பதே தந்தையின் விருப்பமாக இருந்தது. குடிப் பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்த முல்லரோ, 14 வயதில் அதிகாலை 2 மணி வரை கேளிக்கை விடுதியில் சீட்டாடி வெறித்து ஹாஸ்டலுக்கு வந்து படுத்தார். காலையிலே சற்றும் எதிர்பாராத செய்தியுடன் அவர் தந்தை அங்கே வந்து சேர்ந்தார். என்ன ஆயிற்று...? அன்பான தாயார் மரித்துவிட்டார்...! ஆம். தான் குடிபோதையில் சீட்டாடிக்கொண்டிருந்த அதேநேரத்தில்தான் தாயார் வேதனையில் துடிதுடித்து மரித்தார் என்பதைக் கேட்டு திடுக்கிட்டார். துக்கம் தொண்டையை அடைத்தது உண்மைதான்; என்றாலும், அது மனம்திரும்புதலுக்கு ஏற்ற துக்கமாக அமையவில்லை. மீண்டும் அதே பழைய மோசமான வாழ்க்கையே... தொடர்ந்தது.

     16 வயதில் ஊரெல்லாம், நாடெல்லாம் சுற்றிப்பார்க்கும் ஆசை தொற்றிப் பிடித்தது; ஆனால், கையிலோ பணமில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்த அவர், தகப்பனார் வசூலித்து வரச்சொன்ன வாடகைப் பணத்திலும் கை வைத்துவிட்டார். 1821 - ல் முல்லரின் சுற்றுப்பயணம் துவங்கியது. மேக்டிபர்க், பிரான்ஸ்விக் போன்ற பட்டணங்களில் சுற்றித் திரிந்து, ஆடம்பரமாகச் செலவு செய்து, அதிக பணம் கொடுத்து பெரிய ஹோட்டல்களில் தங்கி, கெட்டக்குமாரன் போல கையிலிருந்த பணமெல்லாம் காலியானது. விடுதிக்குக் கொடுக்க பணம் இல்லாதபோது, அவரது விலையுயர்ந்த ஆடைகளை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்! இருப்பினும், அவருக்கு வீடு திரும்ப ஆசையின்றி சில இடங்களில் ஏமாற்றித் தப்ப முயன்றபோது, பிடிக்கப்பட்டு நன்றாக அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வார காலம் முடியும்போது, இதையறிந்த தந்தை ஓடோடி வந்து கட்டவேண்டிய பணத்தைக் கட்டி மகனை மீட்டார். பாருங்க குட்டீஸ்! எப்படிப்பட்ட முல்லரை இயேசப்பா தெரிந்து கொண்டாங்க பார்த்தீங்களா...?

   இப்போது படிப்பில் கொஞ்சம் ஆர்வம் வந்தாலும் கூட, கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டபாடில்லை! வெளியே தெரியும்படியாகச் செய்யாவிட்டாலும், மறைவாகத் தொடர்ந்தார். தாய் மொழியாம் ஜெர்மன் மற்றும் இலத்தின், பிரெஞ்ச் மொழிகளிலும் வரலாற்றிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றார். எல்லாரிடமும் நல்லவராக நடித்தார். தந்தையின் விருப்பம் நிறைவேற குரு பட்டம் பெற ஹாலே யுனிவர்சிட்டியில் சேர்ந்தார். மற்றவர்களுக்காக தன்னை தேவனுக்கு முன்பாக ஆயத்தப்படுத்தவேண்டுமே என்றில்லாமல், ~நல்லவன்| என்று பெயர் வாங்கவேண்டும் என்ற ஒரேயொரு குறிக்கோள் மாத்திரமே அவருக்கு இருந்தது. பள்ளிப் பருவ நண்பர் பேட்டாவோடு சேர்ந்து ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலி நாட்டைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் துடித்தார். ஆனால், பாஸ்போர்ட் வேண்டுமே... தந்தையின் கையெழுத்து வேண்டுமே... அந்தோ! கள்ளக் கையெழுத்து போட்டு பாஸ்போர்ட்டும் வாங்கிவிட்டார். பணத்திற்கு எங்கே போவது..? முல்லர் தனது பாடநூல்களை அடகுவைத்து தேவையான பணத்தையும் திரட்டிவிட்டார்; பயணமும் புறப்பட்டார் நால்வரோடு... அவர்களின் பணத்தையும் தானே நிர்வாகம் செய்து, கள்ளக் கணக்கு எழுதி அவர்களையும் ஏய்த்துவிட்டார். இத்தனையாய் உலகத்தை அனுபவித்தும், கசப்பே மிஞ்சியது. அப்போதுதான் ஒரு வீட்டுக்கூட்டத்தில் முழங்காலில் அவர்கள் ஜெபித்த ஜெபம் முல்லரை அசைத்தது. இரவெல்லாம் தூக்கமின்றி மனப்போராட்டத்தில் அவர் புரண்டார். வாக்னர் என்ற சகோதரன் அவரை கிறிஸ்துவுக்குள் நடத்தியபோது, சுவிட்சர்லாந்தின் அழகான மலைகளில் சுற்றியபோது கிடைக்காத சந்தோஷமும் சமாதானமும் அவருக்குக் கிடைத்தது. இரட்சிப்பின் சந்தோஷம் கிடைக்கப்பெற்ற அன்றே ஊழிய அழைப்பினையும் பெற்றார்.

                புதிய துவக்கம், புதிய வாழ்க்கை... தனது நண்பர்களுடன் இரட்சிப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஆரம்பமானது. எந்த யூத கோத்திரத்திலிருந்து இயேசு வந்தாரோ, எந்த சொந்தங்களே அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லையோ, அந்த யூதர்கள் நடுவில் போலந்து நாட்டில் ஊழியம் செய்ய தன்னை அர்ப்பணித்திருந்த ஹெர்மன் பால் என்ற புதிய நண்பர் மூலம், தானும் ஒரு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்தபோது, தன் தந்தையின் கோபத்திற்கு ஆளானார். ஓய்வு பெற்றபின் தானும் மகனோடு சேர்ந்து வசதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கனவுகண்ட தந்தைக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், வசதியான வாழ்க்கையல்ல, மெய்யான அர்ப்பணிப்புடன் தியாகமாகச் செய்யும் அருட்பணிதான் தன் அழைப்பு என்று கடினமான ஆனால் ஒரே தீர்மானமாக ஜெபித்து தன் தகப்பனாரின் கைகளில் பணஉதவியை எதிர்பாராமல் ஆண்டவரின் கைகளில் தன்னைத் தந்தார் முல்லர்.

Jan 2026

 













எல்லா குட்டீஸ்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! எங்கும் ஏகப்பட்ட இயற்கைப் பேரழிவுகள்... பூமிஅதிர்ச்சிகள், வெள்ளங்கள்... இன்னும் யுத்தங்கள் ஓய்ந்தபாடில்லை. மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரவேல் - பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா - உக்ரேன் போன்ற நாடுகளில் சில ஆண்டுகளாக யுத்த மேகங்கள் கலைந்தபாடில்லை. 15 ஆம் நூற்றாண்டில், 13 வயதினிலே தெய்வ தரிசனங்கள் பெற்று, தேவசத்தம் கேட்டு, பின் 16 வயதிலே யுத்தத்திற்குச் சென்று, தேவனின் பெலத்தில் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கையைத்தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம். 

பிரெஞ்சில் 'ஜீன் டி ஆர்க்" என்று அழைக்கப்பட்ட இவர், பிரான்ஸ்க்கும் இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த நூறாண்டுப் போரின் காலத்தில், பிரான்சின் டாம்ரேமி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் 1412 ஆம் ஆண்டு பிறந்தார். உங்களைப் போன்று படிக்கவோ அல்லது எழுதவோ அவருக்குத் தெரியாது. ஆனால், அவர் மிகுந்த நம்பிக்கையும் தைரியமும் கொண்டவர். 

டீன்ஏஜ் பருவம் தொட்டதிலிருந்து ஜோன் தேவனை அதிகமாகத் தேட ஆரம்பித்தார். சில வேளைகளில் தெளிவான குரலில் தேவ சத்தத்தை அவர் கேட்டபோது, அதை மக்களிடம் கூறினார். பிரான்ஸ் தேசத்தை விடுவிக்க வேண்டும் என்றும், இளவரசர் சார்லஸ் VII  - ஐ அரசராக்க உதவவேண்டும் என்றும் ஜோன் மக்களுக்குச் சொன்ன போது, மக்கள் அவரை சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக பேசுகிறது என்று வேடிக்கைப் பார்த்தனர். ஓர் இளம்பிள்ளை என்பதால் ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை; அவரை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் பலரிடம் பேசி எப்படியோ இளவரசர் சார்லஸை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு எட்டியது. அவரது ஆன்மீக பெலத்திலும், பேச்சிலும் ஆழ்ந்த நம்பிக்கையிலும் ராஜாவே மிகவும் வியப்படைந்தார். 

1429 ஆம் ஆண்டு முற்றிக்கையிடப்பட்ட ஆர்லியன்ஸ் நகருக்கு அனுப்பப்பட்ட பிரெஞ்ச் நிவாரணப்படையை வழிநடத்த ஜோனுக்கு படைக்கவசம் அளிக்கப்பட்டது. பிரெஞ்ச் ராணுவத்துடன் போருக்கு சென்று மன்னருக்கு உதவி செய்து பிரான்ஸ் நாட்டை திரும்பப் பெறவேண்டும்; இதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் கட்டளை! கட்டளை பிறந்ததும் வீரமுடன் எழும்பினார் ஜோன்; தன் தலை முடியைக் கத்தரித்துக்கொண்டு, போர் உடை அணிந்து, வேதத்தில் வரும் தெபோராள் போல போர்க்களம் கிளம்பிவிட்டாள்! அவரின் வருகை வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. எங்கும் யுத்தசத்தம்... கார்மேகங்கள் போன்று தெரிகிறது. மக்கள் நிம்மதியின்றி பயத்துடனும் கலக்கத்துடனும் இங்கும் அங்குமாக அலைமோதுகின்றனர். 

இவர் கிறிஸ்;தவ பெண் என்பதால் திருச்சபை போதகர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் சிறு பெண்ணை உற்சாகப்படுத்தாமல் மாறாக அவளை பரிகாசமும் கேலிக் கிண்டலும் செய்தனர். இப்பெண் என்னதான் செய்வாள் என்று ஏளனமும் செய்தனர். ஆனால் தாவீதைப்போல கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வந்த சிறிய படையோ வீரமுடன் போரிட்டது. ஜோன் பிரெஞ்ச் வீரர்களுக்கு அதிகமாக நம்பிக்கையூட்டினதால் ஒன்பது நாட்களுக்குள்ளே ஆங்கிலேயர்களிடமிருந்து ஆர்லியன்ஸ் நகரைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடினர். இது போரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஓன்றல்ல, இரண்டல்ல... தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைக் குவித்துவிட்டார் ஜோன்! ஜோனின் தலைமையில் நடந்த இந்த 'ஆர்லியன்ஸ் நகரின் விடுதலை" பிரான்ஸ்க்கான மிகமுக்கிய வெற்றியாக வரலாற்றில் அமைந்தது. இந்த வெற்றிகள் தான் சார்லஸ் VII - ஐ ரீம்ஸ் நகரில் அரசராக முடிசூட உதவின. இந்திய வரலாற்றில் ஜான்சியின் ராணி இலட்சுமிபாய் போன்று பிரிட்டீஷ் ராணுவத்திற்கு எதிராக வீரப்பெண்மணியாய் வெற்றிச்சிறந்தார் ஜோன்!! 

என்ன சுட்டிப்பிள்ளைகளே உங்களைப்போன்றே ஜோனும் படுசுட்டிதான்!!! யுத்தத்தை முன்னின்று நடத்துவது சாதாரண காரியமா? 

இந்நாட்களில் யுத்தங்களினால் எத்தனை மரணங்கள்... அழிவுகள்... இழப்புகள்... தாய் தந்தையை இழந்து தவிக்கும் அனாதைக் குழந்தைகள், உணவுக்காக ஓலமிட்டும் ஒன்றும் கிடைக்காமல் பட்டினியால் சாவோர்... அப்பப்பா... ஒவ்வொரு நாளும் நியூஸ் பேப்பரிலும்.. டிவியிலும் பார்க்கும்போது எத்தனையாய் வேதனை...? 

ஆனால் பின்னால் என்ன நடந்தது...? மதவாதிகளுக்கோ ஜோனை பிடிக்கவில்லை. அவர்கள் ஜோனை சந்தேகித்தனர், ஏனென்றால், அவர்களுக்கு இப்படிப்பட்ட தேவதரிசனங்கள், திட்டங்கள் கிடைக்கவில்லை... இல்லையா... பிள்ளைகளே..? தாங்கிக்கொள்ள முடியாத அக்கூட்டம் அவளை 'பொய்புரட்டுக்காரி" என்று தீர்ப்பிட்டு திருச்சபைக்கு புறம்பாக்கியது. ஆனால், அவரோ தனக்கெதிராக சொல்லப்பட்ட அத்தனை அவதூறுகளையும் ஆணித்தரமாக மறுத்ததோடு தகுந்த விளக்கங்களையும் தந்தார். இது அவர்களை மேலும் மேலும் நடுங்கச்செய்தது. 

1430 ல் ஜோன், பிரிட்டீஷ் - பிரெஞ்ச் கூட்டாளிகளான உளவு பார்த்த எதிரிகளால் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பிரிட்டீஷ் ஆதரவுடைய நீதிமன்றத்தில் அநியாயமாக விசாரிக்கப்பட்டது. 'சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்.." என்று அன்று கூவின கூட்டம் போல் இங்கேயும் 'மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும்" என்று ஏவிவிட்டனர். ஜோனை விடுவிக்கவோ அவருக்காக பரிந்து பேசி வாதிடவோ யாருமே இல்லையா? ஜோனுக்கு கொடுக்கப்பட்ட வேலையும் நோக்கமும் (purpose)  நிறைவேறிவிட்டனவா? 

ஆம்; எதற்காக ஜோன் தேவனால் பிடிக்கப்பட்டாரோ அதை செய்து முடித்துவிட்டார். தன்னை பூரணமாக தேவனின் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். 

1431-ல் மே 31 அன்று இளம்பெண் ஜோன் தனது 19 வயதிலேயே ரூவான் நகரில் மரத்தில் கட்டப்பட்டவராய்; தீயில் உயிருடன் எரித்துக் கொளுத்தப்பட்டார். கொடுங்கோலர்கள் வேடிக்கைப் பார்க்க, அத்தீயின் நடுவே அவர் உதடுகள் 'இயேசுவே... இயேசுவே..." என்று முணுமுணுக்க உடல் எரிந்தது... உயிர் பிரிந்தது... விண் நோக்கிப் பறந்தது...! 

இயேசு கிறிஸ்து விண்ணைவிட்டு மரிப்பதற்காகவே மண்ணில்வந்து அத்தனை பாடுகளையும் வேதனைகளையும் நமக்காக சகித்து மரித்து உயிர்த்தார் என்றால் அவருக்காக நாம் எந்த தியாகத்தையுமே பெரிதாக செய்துவிட முடியாது. 

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மறுவிசாரணையில் ஜோன் 'நிரபராதி" குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டதோடு அவர் தியாகி என்று தெரிந்து நிரூபிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது! அதோடு கத்தோலிக்க திருச்சபையால் அவருக்கு 'புனிதர்" பட்டமும் கொடுக்கப்பட்டது!! ஜோன் ஆப் ஆர்க் இன்றும் பிரெஞ்சு தேசத்தின் ஒற்றுமை, வீரம் மற்றும் நம்பிக்கையின் நீடித்த சின்னமாக விளங்குகிறார். 

அன்பான செல்லங்களே! எப்படி இப்பெண் உலக வரலாற்றில் மட்டுமின்றி தேவனுடைய பெரிய history -  யில் வந்திட்டாங்க பார்த்தீங்களா? நீங்களும் அதே ஹிஸ்டரியில் ஒரு முக்கியமான part அப்படித்தானே...? உங்க வாழ்க்கையிலும் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு தானே... அது