ஹாய்
செல்லங்களே! நீங்க இயேசப்பாவுக்கு
தேவைப்படுறீங்க தெரியுமா? கடந்த 20ஆம் நூற்றாண்டில், சீன தேசத்தையே திருப்பிப் பார்க்க வைத்த ஒரு
பெண்ணைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம். சீன தேசம் இன்று பலவிதங்களில் பெரும்
உயரங்களைத் தொட்டதற்கு இவரைப் போன்றோர் தான் காரணம்.
கிளாடிஸ் உற்சாக ஆவியும் விடாமுயற்சியும்
உள்ளவர். சுத்தம், சுகாதாரம்,
கஷ்டங்களைச் சமாளிப்பது,
விருந்தினரை உபசரிப்பது,
ஏழை எளியவர்க்குச் சேவை செய்வது
மற்றும் சகல நன்னடத்தையிலும் கெட்டிக்காரி. ஆனால், ஸ்கூல் பாடம் என்று வந்துவிட்டாலோ
சுருங்கிப்போய்விடுவார்; கணக்குப் பாடம்
பிடிக்காது. மற்றவரைப் போன்று நடித்துக்காட்டி விமர்சனம் செய்வதில் தேறினவர்.
வீட்டில் மூத்த மகளான இவர், படிப்பு வராததால்
14 வயதிலேயே பெட்டிக்
கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பின்னர் மளிகைக் கடை வேலை பறிபோனதால், குறைந்த ஊதியத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக அதிக
நேரம் வேலை செய்தார். லண்டன் மாநகரின் வீதிகளும், பெரும் விளக்குகளும், கேளிக்கை விடுதிகளும், பெரிய செல்வந்தர்கள் பகட்டாய் உடையணிந்து
மிடுக்காய் நடைபோடுவதும் மற்றும் பார்களிலும் ஹோட்டல்களிலும் இருந்துவரும்
இசைகளும் நடனங்களும் கூத்தாட்டங்களும் அவருக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தன. தன்
அத்தை மகள் குயினியுடன் சேர்ந்து நாடக அரங்குகளில் ரசித்து மகிழ்ந்தார். தானும்
ஒரு நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஒருநாள், ஓர் ஆலயத்தின் முன் நின்றிருந்த போது, சிலர் அவரை உள்ளே அழைத்துச் சென்றபோது, வேண்டா வெறுப்பாக சிரித்துக் கொண்டு, அரை மனதோடு உள்ளே சென்றார். 'நம் நினைவுகளையெல்லாம் உயிருள்ள ஆண்டவர்
அறிவார். ஒரு நாளில் நாம் எல்லாவற்றிற்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். பாவிகளை
நேசிக்கும் தேவன் பாவங்களை வெறுக்கிறார். நாம் திருந்தி வந்தால் நம்மை மன்னித்து
ஏற்றுக்கொள்வார்" என்று ஏற்கனவே கேட்டிருந்த வார்த்தைகள் தான்; ஆனால், அன்று ஏதோ புதிதாய்த் தெரிந்தது. பயத்தோடு விரைவாய் எழுந்து வெளியே செல்லும்
போது, வாசலில் நின்ற போதகர்,
'கிளாடிஸ் நீ தேவனுக்கு
தேவைப்படுகிறாய்" என்று சொன்னபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள் கிளாடிஸ். மீண்டும் போதகர் கிளாடிசை
நோக்கி, 'உனக்கு ஒருவேளை
தேவன் தேவையில்லை; ஆனால், அவருக்கு நீ தேவை!" என்றார்.
ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போன்ற குற்ற
உணர்ச்சியுடன் மனதில் பெரும் போராட்டம். போதகரின் மனைவி அவருக்கு தெளிவான
ஆலோசனைகள் தந்தபோது, 'ஜீவ காலமெல்லாம்
உமக்கே என்னைத் தருகிறேன்" என்று அர்ப்பணித்து இரட்சிப்பின் வழியில் நடக்க
ஆரம்பித்துவிட்டார் கிளாடிஸ். சினிமா போன்ற கேளிக்கை வாழ்க்கை நின்றுபோய், ஆலய ஆராதனைகள் மற்றும் ஜெபக்கூட்டங்களில்
கலந்துகொண்டு தன் சாட்சியைப் பகர்வதின் மூலம், அநேகருக்கு ஆசீர்வாதமான பாத்திரமாக
மாறினார்.
ஒருமுறை, கையில் செய்தித் தாளுடன் பஸ்ஸில் பயணம்
செய்தபோது, 'மருத்துவமனைகள்,
பள்ளிக்கூடங்கள், இரயில்கள், ஆகாயவிமானங்கள் என்று மேல்நாட்டு
நாகரீகத்திற்கு சீனா திறந்திருக்கிறது" என்ற செய்தியினை வாசித்தார். ஆனால்,
அங்கோ
இலட்சக்கணக்கானவர்கள் இன்னும் சுவிசேஷத்தை கேள்விப்படவேயில்லை; இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திக்கத் தொடங்கினார். இதற்குப்பின்
அவரது எண்ணமெல்லாம் சீனாவைப் பற்றியே இருந்தது. ஒருநாள், தந்தை, 'சீனா, சீனா என்று சொல்லுகிறாயே, நீ அங்கு போய்
என்னசெய்யப் போகின்றாய்? நீ என்ன நர்சா
அல்லது டீச்சரா மிஷனரியாக சீனாவுக்குப் போக? பின்னே சீனாவில் என்னத்தை சாதிக்கப் போகிறாய்?
உன்னால் இதைப்பற்றி
பேசமட்டும் தான் முடியுமேயன்றி வேறொன்றும் முடியாது" என்றார். ஏளனமான இந்த
வார்த்தைகள் கிளாடிஸின் இதயத்தைத் துளைத்தன.
1930 ஆம் ஆண்டு ஹட்சன் டெய்லரால் ஸ்தாபிக்கப்பட்ட 'சீன உள்நாட்டு மிஷன்"-க்கு
விண்ணப்பித்தார். 18 வயதில்
இரட்சிக்கப்பட்ட இவர் 28 வயதில் 24 பேரோடு ஹைபரி என்ற இடத்தில் பெண்கள் பயிற்சி
மையத்தில் சேர்ந்தார். சீனா செல்லவேண்டுமானால் பிரயாணம் ஒருமாத காலத்திற்கு மேல்
ஆகலாம். அங்கு போன பிறகு 7 ஆண்டுகள்
கழித்துதான் தாய் நாடு திரும்பமுடியும்; பணக்கஷ்டம், வைத்திய வசதிக்
குறைவு, ஆபத்துக்களில்
போலீஸ் பாதுகாப்பின்மை ஆகியவற்றை அனுபவிக்கவேண்டும். இதெல்லாம் அவரை பின்னோக்கித்
திருப்பிவிடாதபடி மனதை உறுதியாகத் திடப்படுத்தவே உதவின. வகுப்பில் நடத்தப்படும்
பாடங்களை சரியாகப் புரியமுடியவில்லை, குறிப்பெடுக்கவும் தெரியவில்லை. பக்கத்திலிருப்போரின் உதவியோடு எப்படியோ
எழுதிவிடுவார் கிளாடிஸ். ஆனால், இறுதி முடிவோ
கிளாடிஸ்க்கு எதிரான ரிசல்ட். தொடர்ந்து மேற்பயிற்சிக்கு தகுதியற்றவரானார். சீன
மொழி கடினமானது அதைக் கற்றுக்கொண்டு வெளிநாட்டினர் பேசுவது அரிதிலும் அரிது. எனவே
சீனாவை மறந்துவிட்டு இங்கேயே ஊழியம் செய் என்று பலர் வெறுப்பேற்றினர். வேறெந்த
நோக்கமோ திட்டமோ இல்லாமல் ஏமாற்றத்தோடு வெளியேற்றப்பட்டார் கிளாடிஸ்.
சீனாவில் மிஷனரிகளாக வாழ்ந்து திரும்பி
வந்திருந்த வயதான தமபதிகளுக்கு சேவை செய்தும் அவர்களிடமிருந்து சீன நாட்டைப்
பற்றிய தகவல்களைச் சேகரித்தும் சில காலம் பணிசெய்தார். வேறுயாரும் தன்னை
சீனாவிற்கு அனுப்பாவிட்டாலும் தானே வேலை செய்து கிடைக்கும் பணத்தில் டிக்கெட்
வாங்கி எப்படியும் சீனா போய்விடத் தீர்மானித்தார். ஒரு கூட்டத்தில் சந்தித்த நபர்
மூலமாக சீனாவில் பல ஆண்டுகளாக மிஷனரியாக இருக்கும் 73 வயதான திருமதி. லாவ்சன் அம்மையாருக்கு ஓர்
உதவியாள் தேவைப்படுகிறார் என்றறிந்ததும், 'அந்த ஆள் நான் தான்" என்று கிளாடிஸ் சொல்லிக் கொண்டார். ஆம், 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 15 லிவர்பூல் தெரு ரயில் நிலையத்திலிருந்து
வாழ்க்கையின் இலக்கை நிறைவேற்ற சீனாவை நோக்கி கிளாடிஸின் மிஷனரிப் பயணம்
தொடங்கியது. அந்நாட்களில் யுத்தம் நடந்துகொண்டிருந்ததால், இடையிடையே ரயில்கள் நிறுத்தப்பட்டதோடு, வேறு பாஷைகளும் தெரியாமல் அங்குமிங்கும்
அலைக்கழிக்கப்பட்டவராய், திருமதி. ஜீனி
லாவ்சன் அம்மையார் இருக்கும் யாங்செங் வந்தார். இடிந்த கட்டிடங்களும் மற்றும்
குப்பைமேடுகளும் நிறைந்ததாகப் பராமரிக்கப்படாமல் அந்த இடம் இருந்தது. நீ யாரம்மா?
உள்ளே வர விரும்புகிறாயா?
என்று மெலிந்த உருவத்தில்
இருந்த வயதான லாவ்சன் அம்மையார் கேட்டார். கிளாடிஸை அழைத்துவர தன் உதவியாளர் லூ
என்பவரை அவர் அனுப்பியிருந்தாலும், எல்லாவற்றையும்
லாவ்சன் அப்போது மறந்துவிட்டார்.
திருமதி. லாவ்சன் புதிய உத்திகளைக் கையாண்டு,
தன்னுடைய மிஷன் வளாகத்தை
ஒரு லாட்ஜ் போல வைத்திருந்தார். வியாபாரிகள் அந்த மலைகளில் வியாபாரப் பொருட்களை
கோவேறு கழுதைகளில் ஏற்றிக்கொண்டு போகும் வழியில் இது அமைந்திருந்தது. பிரயாணக்
களைப்பில் வியாபாரிகள் இப்படிப்பட்ட லாட்ஜ்களில் தங்கி இளைப்பாறி, உணவு உண்டு பின் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வர்.
அப்படி வருவோருக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை கதைகள், பஜனை மற்றும் நாடக பாணியில் நடித்துக்காட்டி,
படங்களையும் காட்டி நேரம்
போவதே தெரியாதபடி அவர்களை மகிழ்ச்சியாக்கிவந்தார் அவர். கிளாடிஸ்க்கு
கொடுக்கப்பட்ட வேலையோ, 'வாசலில் நின்று விளம்பரம் செய்வது போல்
அவ்வழியே வரும் பிரயாணிகளை நிறுத்தி, 'வாங்க வாங்க! இங்கே தங்குவதற்கு நல்ல விசாலமான அறைகளுடன் இடமுண்டு!"
என்று கூவி அழைப்பதே. சீன மொழியை முறையாகக் கற்றுக்கொள்ள முடியாமல், தெருப் பிள்ளைகளுடன் உறவாடி கொஞ்சமாகப் பேசக்
கற்றுக்கொண்டு, அங்குள்ள உணவை
உண்டு, சீனர்களைப் போலவே
உடையணிந்து, அவர்களில்
ஒருவரானார். இந்நிலையில் திருமதி. லாவ்சன் மரித்துவிட, கிளாடிஸ்க்கு பண உதவிகள் கிடைக்கவில்லை,
ஏற்கனவே வந்துகொண்டிருந்த
உதவிகள் நிறுத்தப்பட்டன.
- தொடரும்
