July 2026

 

ஹாய் குட்டீஸ்! அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், பெரிய நிலைகளில் நல்ல வேலைகளில் அமர்ந்து நன்றாயிருக்கவேண்டும் என்பதற்காகவும் தான் நீங்கள் பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் படிக்கிறீர்கள்; அப்படித்தானே சுட்டிப்பிள்ளைகளே!

அதைவிட முக்கியமாக, வேத அறிவு நமக்குச் சரியாக இல்லாவிட்டால், அது தீமைகள் அனைத்திற்கும் வேராய் அமைந்துவிடுவதோடு, மற்றவர்கள் நம்மை ஏமாற்றி இழுத்துச் செல்வதற்கும் காரணமாகிவிடும். சரியான, தெளிவான சத்தியத்தை போதனை செய்தபடியால், சபைக்குப் புறம்பாக்கப்பட்டு இரத்தசாட்சிகளானோர் ஏராளம்! சத்தியத்தைக் கூறுபவர்களைக் கட்டி வைக்கலாம், சுட்டெரிக்கலாம்; ஆனால், சத்தியத்தைக் கட்டிவைக்கவும் முடியாது, சுட்டெரிக்கவும் முடியாது. சத்தியத்திற்காக சுட்டெரிக்கப்பட்டு இரத்தசாட்சியான ஒருவரைப்பற்றி இங்கே பார்க்கலாம். 

பொஹிமியா என்ற நாட்டில் ஹஸ்ஸினெட்ஸ் என்ற கிராமத்தில் பிறந்தார் ஜாண் ஹஸ். பள்ளிப் படிப்பு முடித்ததும், செக்கொஸ்லோவேக்கியாவின் பிரேகு (Pregue)  பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து அங்கே போதகரானார். உருவ வழிபாடு, பாவமன்னிப்புச் சீட்டு, பாதிரிமார்களின் ஆடம்பரமானப் பண ஆசைப் பிடித்த போலி வாழ்க்கை போன்றவைகளை எதிர்த்தார். சத்தியத்தை நன்கு அறிந்து, அவைகளை மக்களிடம் துணிந்து அறிவித்ததினால், மக்கள் சரியான சத்தியத்தில் வளர்ந்து வருவதைச் சகிக்காத கத்தோலிக்கத் தலைவர்கள் கொதித்தனர், வேதத்தை படிக்கத் தடை விதித்தனர்; கொலை செய்யவும் சதித் திட்டம் தீட்டினர். என்றபோதிலும், அது அவர்களின் ஆர்வத்தைக் குறைக்கவில்லை மாறாக ஊக்கத்தை அதிகரிக்கச் செய்தது.  

ஜாண் ஹஸ் மிகத்தீவிரமாக ஊழியம் செய்தபோது ஆர்ச் பிஷப்போ அவரை ஒழித்துவிடத் தீவிரமானார். ரோம் நகரில் போப்பால் கூட்டப்பட்ட விசாரணைக்கு அவரை அழைத்து வரும் வழியில் மறைவான முறையில் தாக்கி சிறையில் தள்ளக் கட்டளையிட்டார். அவர் போக மறுத்தபோது சபைக்குப் புறம்பாக்கப்பட்டார். இருளான சிறைபோன்ற இடத்தில் கான்ஸ்டென்ஸ் என்ற பட்டணத்திற்குப் போகும்படி பணிக்கப்பட்டார்.  கான்ஸ்டென்ஸ்டனை அடைந்ததும் அவரைக் கைது செய்து விசாரணையின்றி கொன்றுவிடலாமென்று தீர்மானித்தனர். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்று எரிக்கப்படுவதற்கு பாத்திரவான் என்று அநியாயமாகத் தீர்ப்பளித்தனர். சிறிய இருட்டறையில் அடைத்து மிகக் கொடுமையாகத் துன்புறுத்தினர். பகல் வேளைகளில் கால்களை பலமான சங்கிலிகளால் கட்டி அங்குமிங்கும் நடக்க அசையமுடியாதபடிச் செய்தனர். இரவு வேளைகளில் படுத்துத் தூங்க முடியாதபடி உயரமான சுவரில் வளையங்களில் கைகளை கட்டிவிட்டனர். ஜாண் ஹஸ் கண்ணீர் நிறைந்த கண்களுடன், ''நான் சபையின் விசுவாசத்திற்கும் தேவனுடைய சத்தியத்திற்கும் விரோதமாக இதுவரை ஒன்றும் பேசினதில்லை. இதற்கு தேவனே சாட்சி."" என்று அமைதியாகச் சொன்னார். வந்தவர்கள் வாயடைத்துப்போய் வியப்புற்று எதுவும் பேசமுடியாமல் போய்விட்டனர்.  

கடைசி முறையாக 1415 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி மறுதலித்துவிட மீண்டும் மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டது. 'நான் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன்" என்றார் திட்டவட்டமாக. 'இவன் அதிக பிடிவாதமும் முரட்டாட்டமும் உள்ளவன். இவனை எல்லார் முன்பும் வைத்து அவமானப்படுத்தி சுட்டெரிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்" என்று தீர்ப்பளித்ததும், 'கர்த்தாவே உம்முடைய மிகுந்த இரக்கத்தினிமித்தம் இந்த அநியாயத்தை மன்னியும்;;; உமது கிருபை இவர்களை இரத்தப்பழியினின்று விடுவிப்பதாக" என்று ஸ்தேவானைப் போல ஜெபித்தார்.  முரட்டுத்தனமாக அவர் போட்டிருந்த குருத்துவ அங்கியை கழற்றி அவர் தலையில் பிசாசுகளின் படம் வரையப்பட்ட குல்லாவை வைத்து ''பக்தர்களின் தலைவன்"" என்று அவரை ஏளனம் செய்தனர். இத்தனை அவமானங்களுக்கு மத்தியிலும் ஒருவித வருத்தமுமின்றி அவர் முகத்தில் காணப்பட்ட பிரகாசமும் அமைதியும், அவர் கர்த்தரைச் சந்திக்கவும் நித்தியத்தை அடையவும் எவ்வளவாய் ஆயத்தத்துடன் இருந்தாரென்பதைக் காட்டுகிறது. 

இரண்டு நாட்கள் கழித்து ஜூலை 6 ஆம் தேதி அவரை பட்டணத்திற்கு வெளியே சுட்டெரிப்பதற்கு அழைத்துச் சென்றனர். ஒரு திருமண விருந்திற்குச் செல்வதைப் போல நெருப்புக்குத் தன்னை ஆயத்தம் செய்தார். குறித்த இடத்தை அடைந்ததும் அவர் முழங்காற்படியிட்டு வேதத்திலுள்ள சில சங்கீதங்களைப் பாராமல் பாடினார். பின்னர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, ''என் கர்த்தாவே! உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். நீர் என்னை இரட்சித்திருக்கிறீர்."" (சங்கீதம் 31:5) என்றார். சேவகர்கள் அவரைச் சங்கிலிகள் கொண்டு கம்பத்தோடு சேர்த்துக் கட்டியபோது, ''என் ஆண்டவர் இயேசு இதைக் காட்டிலும் கடினமான சங்கிலிகள் கொண்டு கட்டப்பட்டாரே! நான் ஏன் இந்த துருபிடித்தச் சங்கிலிகளைக் குறித்து வெட்கப்படவேண்டும்?"" என்று புன்சிரிப்போடு சொன்னார். அவரைச்சுற்றி கழுத்துவரையிலும் வைக்கோலும் விறகுகட்டைகளையும் அடுக்கும் சமயத்திலும் விரோதிகள் அவரை மறுதலிக்கச் செய்ய பெரிதும் முயன்றனர். ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, ''நான் தீமையான எதையும் இதுவரை போதித்ததில்லை. நான் இதுவரை என் வாயினால் கற்பித்த சத்தியங்களை என் இரத்தத்தினால் இப்போது முத்திரிக்கப் போகிறேன்."" என்றார். 'ஒரு பெண் அன்னம்  (Goose)  போன்ற என்னைத்தான் கொளுத்தப்போகிறீர்கள்; ஆனால், நூறு ஆண்டுகளுக்குள் எழும்பப்போகும் அன்னத்தை  (Swan)  உங்களால் ஒன்றும் செய்ய முடியாது." என்றார்.

கட்டைகளுக்கு தீ வைத்ததும் ஜாண் ஹஸ் சத்தமாக ஒரு பாட்டைப் பாடினார். அப்பாட்டைப் பாடி முடிப்பதற்குள்ளாகவே தீ அவரை விழுங்கிற்று. ஆனால் அத்தீயால் அழிக்கப்பட முடியாத அவருடைய ஆவியோ தந்த ஆண்டவர் இயேசுவிடம் பரத்தை நோக்கி விரைந்து சென்று இரட்சகர் இயேசுவின் கரங்களில் அடைக்கலம் பெற்றது! கடலில் கரைக்கப்பட்ட அவரது சாம்பல் உலகமெங்கும் சென்று சத்தியத்திற்கு சாட்சி பகருகின்றது!! 

அன்பான செல்லப்பிள்ளைகளே! சத்தியத்திற்காக ஜீவனையும் பணயம் வைத்து எதையும் எதிர்பாராமல் துணிந்து நின்றோர் வழியில் சென்று செயல்படுவோமா?