கிறிஸ்துவுக்குள் அன்பான தம்பி தங்கையரே! சென்ற இதழில், இங்கிலாந்து தேசத்தில் பிறந்து, சீன தேசத்திற்கு மிஷனரியாகச் செல்லவேண்டும் என்ற வாஞ்சையோடு காணப்பட்ட ஹட்சன் டெய்லர், அதற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்ததை வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்வோமா!
ஒருமுறை ஹட்சன் டெய்லரின் கையில் இருந்ததோ ஒற்றைக் காசுதான். அந்நேரத்தில், சுகவீனமான ஒரு தாயாருக்காக ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டிருந்தார் ஹட்சன் டெய்லர். ஜெபிக்கும்படி அந்தத் தாயாரின் வீட்டிற்கு அவர் சென்றபோது, அங்கே அந்தத் தாயாரின் பிள்ளைகளோ பசியினால் வாடிக்கொண்டிருந்தனர். தாயாருக்காக அவர் ஜெபிக்க ஆரம்பித்தபோது, அவரது வாயில் வார்த்தைகள் வெளிவரவில்லை. தொண்டை அடைத்தது. கையில் பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பசியைப் போக்காமல், மாய்மாலக்காரனாக ஜெபிக்கிறாயா? என்று அவர் மனசாட்சியில் சுடப்பட்டார். தொடர்ந்து, அவர்களைப் பசியாற்றிய பின் ஜெபித்து அங்கிருந்து திருப்தியோடு சென்றார். அதன் பலன் அவருக்கு பல மடங்காகத் திரும்பக் கிடைத்தது. இப்படித்தான் அவர் விசுவாசத்தைக் கற்றுக்கொண்டு, தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தில் வளர்ந்தார்.
கடினமாக உழைத்து, உடற்பயிற்சி செய்து மருத்துவம் பயின்றதோடு, இறையியலையும் அத்துடன் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
உலகின் பல பாகங்களில் சென்று ஊழியம் செய்து கொண்டிருந்த மிஷனரி ஸ்தாபனங்களின் தகவல்களையும் விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டார். எளிமையாக மற்றும் தன்னலமற்ற வாழ்க்கை வாழ்ந்து, தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஊழியத்திற்கு என்று கொடுத்து, கிறிஸ்துவோடு கூட மிகவும் நெருங்கி வாழும் வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டார்.
ஒருமுறை, விஷக் காய்ச்சலினால் மரித்துப்போன ஒருவருடைய உடலைப் பரிசோதிக்கும்போது, இவரும் அந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மரிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். சீனாவிற்கு
மிஷனரியாகச் சென்று அங்கேயே மரிக்கவேண்டும் என்று இருந்த கனவெல்லாம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் எதுவும் இல்லாமல், விசுவாசத்தில் உறுதியாக இருந்து பூரண சுகம் பெற்றார். இவ்விதமாக, பல்வேறு அனுபவங்களின் மூலமாகப் பெலப்படுத்தப்பட்டவராய், 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹட்சன் டெய்லர் சீனாவிற்கு கப்பலேறி, ஒருசில நண்பர்கள் அவரை வழியனுப்ப தரிசனமும் அழைப்பும் பெற்ற நாட்டிற்குப் பிரயாணப்பட்டார்.
நெடுந்தூரம், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடற்பிரயாணம் செய்து சீன நாட்டில் ஷாங்காய் துறைமுகத்தில் வந்து அவர் கரை இறங்கியபோது, வரவேற்பதற்கு என்று யாரும் இல்லை; நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களோ ஒருவரும் இல்லை. இருப்பினும், சீன மண்ணில் கால் வைத்தபோது அவரது உள்ளமெல்லாம் குளிர்ந்தது. கனவெல்லாம், தரிசனம் எல்லாம் நிறைவேறும் காலமல்லவோ அது! அந்த சீன நாட்டின் உள்ளே மூலை முடுக்கெல்லாம் புகுந்து மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும் தாண்டி நதியாகப் பாய்ந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கப் போகிறவர் அல்லவா அவர்!!
இளம் வாலிப மிஷனரியை நோக்கி பல சவால்கள் தேடி வந்தன! விலைவாசி உயர்வினால் உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலைமை மற்றும் உள்நாட்டு மக்களின் புரட்சி அவருடைய உற்சாகத்திற்கு முட்டுக்கட்டை கொடுக்க, அவரோ மிகக் குறைந்த மொழி அறிவோடு இருந்தாலும், சீன மக்களைச் சந்திப்பதிலும், நற்செய்தி நூல்கள் மற்றும் கைப்பிரதிகளைக் கொடுப்பதிலும், சீனர்களைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவதிலும் மிகவும் துடிப்பாக இறங்கினார்.
இவ்வாறாக, கைப்பிரதிகளைக் கொடுத்து ஊழியத்தைச் செய்துகொண்டிருந்த வேளையில், உயரமான குடிகார பலசாலி மனிதன் கையில் ஒரு முறை இவர் மாட்டிக்கொண்டார். தலை முடியை பிடித்து இவரை அந்த மனிதன் உதைத்த நிலையில், மயங்கி விழுந்தபோதிலும், மீண்டும் எழுந்து எல்லோருக்கும் நற்செய்தி நூல்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தார்; காரணம் இனி ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்குமா என்ற ஏக்கம் தான். ஒருபுறம் எதிரிகள் இருக்கத்தான் செய்தார்கள்; ஆனால், மறு பக்கமோ அவருக்கு வரவேற்பும் இருந்தது. ஒரு அரசாங்க அதிகாரி அவரைப் பார்த்து, அவருடன் மிகவும் மரியாதையாக மற்றும் ஆறுதலாகப் பேசி ஒரு புதிய ஏற்பாட்டையும் பெற்றுக்கொண்டார். சீனர்களை ஆதாயப்படுத்த வேண்டுமானால் சீன மக்களைப் போன்றே ஆக வேண்டும் என்று அறிந்திருந்த அவர், சீன மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். சீன உடைகளை வாங்கி அணிய ஆரம்பித்தார். இது ஐரோப்பிய மிஷனரிகளுக்குப் பிடிக்கவில்லைதான், 'எப்படியாயினும் சிலரையாவது இரட்சிக்கும்படிக்கு நான் யூதருக்கு யூதனாகவும், கிரேக்கருக்கு கிரேக்கனாகவும், எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன்" என்று பவுல் அடியார் சொன்னது போல, அவர் வாழ ஆரம்பித்தார். இதனால் சீக்கிரத்திலே அவருக்கு முதற்கனியாக பலன் கிடைத்தது. பின்னால் இருந்து அவருடைய கரங்களைத் தாங்கி பிடித்து உதவியோ மற்றும் ஒத்தாசையோ செய்வார் யாருமே இல்லை. ஆண்டவருடைய வழி நடத்துதலும் அவருக்கு ஓர் அடி மாத்திரமே கிடைத்தது. என்றபோதிலும், அவருக்கு தொலைநோக்குத் தரிசனம் இருந்ததால், அவர் பாதத்தில் அதிகமாகக் காத்திருந்தார். உள்நாட்டில் ஆங்காங்கே எதிர்பாராத புரட்சிகள் வெடித்த நிலையில், பிரிட்டிஷ் அதிகாரிகளால் உள்நாட்டிற்குள் செல்ல மறுக்கப்பட்டார். ஆனால், அவரோ தன்னைக் காப்பாற்றிக் கொள்வதை பார்க்கிலும், சீன மக்களுக்கு இயேசுவை இரட்சகராக அறிவித்து, அவர்களைப் பாதுகாப்பதையே தனது பிரதான நோக்கமாக வைத்திருந்தார்.
ட்ச்சுங் என்ற நகரில் ஓர் மருத்துவமனையை நிறுவி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவச் சேவை செய்தார். ஒருமுறை, ஒரு மருத்துவமனையோ அல்லது மருத்துவரோ இல்லாத வேறொரு இடமான நிங்போ என்ற நகருக்குச் செல்வதற்காக வேலைக்காரனோடு தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றபோது, வேலைக்காரனோ அவருடைய பொருட்களை எல்லாவற்றையும் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். இந்நிலையில், சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல், களைத்துப் போய் மயங்கிய நிலையில், தன் பொருள்கள் பறிபோனதைப் பற்றி கொஞ்சமும் அவர் கவலைப்படவில்லை, அவரது கவலை எல்லாம் சீனர்களைப் பற்றியே இருந்தது. - தொடரும்