October 2025

 




ஹாய் குட்டீஸ் ரூ சுட்டீஸ்!  உங்களுக்குச் சொந்தக்காரங்க வீடுகளில் அல்லது எங்கேயாவது இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறதா? இரட்டையர்களைப் பார்த்திருக்கீங்களா? நீங்க கூட ஒருவேளை ட்வின்சா பிறந்து இருக்கலாம். பல இரட்டையர்களை நாம் பார்க்கும்போது எவ்வளவு அழகாக, ஒற்றுமையாக யாரிவர் என்று நாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி, அவர்கள் படிப்பிலும் கூட ஒரே மதிப்பெண்கள் வாங்கும் அளவிற்கு என்னே ஆண்டவரின் படைப்பு! சில இரட்டையர்கள் பெரியவர்களானாலும் அப்படியே இருப்பதை நாம் பார்க்கும்போது எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது!! ஆனால் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டால், அது பிசாசு கொடுத்த குழந்தைகள் என்று சொல்லி காட்டில் கொண்டுபோய் தூக்கி எறிந்து வீசி கொலை செய்துவிடுவார்கள். அதோடு பெற்றத் தாயையும் காட்டிற்குள் துரத்திவிடுவார்கள். அவர்கள் ஒரு வேளை பசியால் துடி துடித்துச் சாகலாம் அல்லது காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்படலாம். அன்பு பிள்ளைகளே! அது உங்களுக்கு தெரியுமா? ஐயோ பாவம்! என்ன பரிதாபம் பார்த்தீங்களா குட்டீஸ்!! ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் ஆண்டவர் அனுப்பி வைத்த ஒரு 'அம்மா" செய்த சீர்திருத்தங்களையும், மிஷனரி ஊழியத்தையும் தான் இங்கே நாம் பார்க்கப் போறோம்.... சரிங்களா?

ஆப்பிரிக்கா கண்டத்தை இருண்ட கண்டம் என்று சொல்லுவாங்க. ஆனால், அங்கே  முதலில் ஆப்பிரிக்கா கண்டத்திற்கே அப்போஸ்தலனாக, மிஷனரியாகக் கடந்து சென்றவர் தான் டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மாபெரும் மிஷனரி. அவர் இப்போது அங்கே விதையாக மரித்துவிட்டார். இதனால் அங்கே ஒரு காலியிடம் உருவாகியிருக்கிறது. இப்போது 'அவர் செய்த ஊழியத்தைச் செய்வதற்கு அங்கே யாருமே இல்லையா?' அப்படின்னு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. வேறு எந்த விதத்திலும் ஆப்பிரிக்கா செல்வதற்கு வழி இல்லாவிட்டால் கடலில் நீந்தியாவது நான் சென்று விடுவேன் என்று வீரமுழக்கமிட்டவர் இந்த வீரப் பெண்மணி!

 ஸ்காட்லாந்து தேசத்திலே அபர்டீன் என்னுமிடத்தில், டிசம்பர் 2, 1848- ல் செருப்பு தைக்கும் ஒரு குடிகாரத் தகப்பன், ஆனால் மிகவும் பக்தி உள்ள ஒரு தாய் இவர்களுக்கு மகளாக மேரி ஸ்லேசர் பிறக்கிறார். வறுமையால் வாடும் இவர்களுக்கு சில பிள்ளைகள்; இதில் மூத்தவர் ராபர்ட், இரண்டாவது மேரி. சனிக்கிழமை என்றாலே முழு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு நன்றாக குடித்து வெறித்து, சிக்கன் மட்டன் என்று நன்றாகச் சாப்பிட்டு, சம்பளத்தை எல்லாம் விருதாவாக வீசிவிட்டு, வீட்டிற்கு வரும் அப்பாவைப் பார்க்க எல்லா பிள்ளைகளும் பயந்து நடுங்கி ஆங்காங்கே ஒளிந்துக் கொள்ளுவர். ஒருமுறை வீட்டில் சாப்பாட்டுத் தட்டை காலால் உதைத்து வீசி எறிந்தபோது, 'ஏன் அப்பா இப்படி......?" என்று அன்று மேரி கேட்டதினால் தன் தந்தையால் வீட்டுக்கு வெளியே துரத்தப்பட்டு, ஒரு குளிர்கால இரவு முழுவதும் அழுது கொண்டே கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு, முழு இரவையும் வெளியே கழிக்க வேண்டியதாயிற்று. பக்தி நிறைந்த தாயோ, தன் செல்லப் பிள்ளைகளைப் பக்கத்தில் அமர வைத்து அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்ததோடு மிஷனரிகளின் சரித்திரங்களையும் அவர் சொல்லித் தருகிறார்.       

     டண்டி (Dundee) எனும் இடத்தில் அவர்கள் இருக்கும்போது, ஒரு வயதான பாட்டி சிறுபிள்ளைகளை அழைத்து, தின்பண்டங்கள் கொடுத்து, குளிர் காயவும் உதவுவார்கள். சிறு பிள்ளைகளுடன் கிறிஸ்துவின் அன்பை எப்படிச் சொல்வது என்று அந்த பாட்டிக்குத் தெரியாது ஆனாலும் அவர்கள், 'நீ உன் பாவங்களை விட்டு மனம் திரும்பாவிட்டால் தண்டனை பெறுவாய்' என்று கூறி பயமுறுத்தினார்கள். தன் பாவங்களை உண்மையாய் அறிக்கை செய்து, 'இயேசுவே என்னையும் உன் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும்.' என்று ஜெபித்த மேரி அன்றிலிருந்து இயேசுவின் பிள்ளையாக மாறினாள். ஒரு முறை மேரியின் தாய், ஆப்பிரிக்கக் கண்டத்திலே மிஷனரியாக பணி செய்த டேவிட் லிவிங்ஸ்டனைப் பற்றியும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும் அழகாகச் சொல்லி, அவருடைய இருதயம் அங்கே விதைக்கப்பட்டிருப்பதாக எடுத்துக் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய பிள்ளைகள் தாங்களும் பெரியவர்களாகும் போது மிஷனரிகளாகச் செல்லவேண்டும் என்று தீர்மானம் செய்கின்றனர். மேரி தனது அண்ணன் ராபர்ட் கண்டிப்பாக மிஷனரியாகச் செல்வார் என்று நினைக்கிறார்.

      தந்தையின் குடிப்பழக்கத்தினால் குடும்பம் உறுதியற்ற தன்மையிலும் அதிக சவால்கள் நிறைந்தும் காணப்பட்ட போதும், மேரியின் தாய் பிள்ளைகளுக்குள் அதிக வலுவான கிறிஸ்தவ நம்பிக்கையை விதைத்தார். அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமானதாக இருந்தது.

தனது பதினோராவது வயதிலே குடும்ப பாரம்  அதிகமானபடியினால், ஓர் ஆலையில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் மேரி. மேரிக்கு அப்போது வயது 14.  திடீரென்று அந்த குடும்பத்தில் இடி விழுந்தது போன்று குடிபோதையில் தூக்கத்திலே மரித்துப்போன தந்தை, அதோடு ராபர்ட் என்ற மூத்த சகோதரனையும் இன்னும் ஒரு சகோதரனையும் மரணத்தில் இழக்க வேண்டியது வந்தது.