November 2025

 











    ஸ்காட்லாந்து தேசத்தில் வறுமையான ஒரு குடும்பத்தில் குடிகாரத் தகப்பனுக்கும் பக்தியான தாய்க்கும் இரண்டாவது மகளாகப் பிறந்து, தந்தையின் பல துன்பங்களின் மத்தியிலும் தாயின் அன்பினால் வேதத்தின் வழியில் நடத்தப்பட்டு, இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தந்தை மற்றும் சகோதரர்களின் மரணத்தின் மத்தியிலும் கிறிஸ்துவுக்காய் ஊழியம் செய்யத் தொடங்கி, தனது 28-ம் வயதில் நைஜீரிபாவுக்கு மிஷனரியாகப் புறப்பட்டுச் சென்ற மேரி மிட்செல் ஸ்லெசரைக் குறித்து கடந்த இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில் அவர் நைஜீரியாவில் செய்த ஊழியத்தைக் குறித்து மேலும் அறிந்துகொள்வோமா? 

இன்றைய நைஜீரியாவின் காலாபர் நதி பாயும் இடம். மனிதர்கள் அங்கு மனிதர்களாகவே இல்லை, வாழ்க்கைக்கான சட்டமில்லை, வாழ்க்கை முறையும் இல்லை. மூடப் பழக்கவழக்கங்கள் மலிந்து கிடந்தன. அந்தோ பரிதாபம்! இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஒரு தாய். குழந்தைகளின் உடல் ஈரம் காயும் முன்பே, அக்குழந்தைகள் அழும் சத்தம் வருவதற்கு முன்பே, கொடூரன் ஒருவன் மூர்க்கமாய்க் குழந்தைகளை தாயின் கரங்களில் இருந்து பறித்து, தலைகளைத் துண்டித்து வீசுகிறான். பெற்றத் தாயும் காட்டிற்குள் விரட்டப்படுகிறாள். மேரியின் கண்கள் கண்ணீரைக் கொட்டிச் சிவந்தன. அவர் வெகுண்டு எழுந்தார். வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு உண்மையைச் சொல்லி மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து அவர்களின் அறிவு கண்களைத் திறந்தார். வரும் நாட்களில் அங்கே பிறக்கவிருந்த இரட்டைக் குழந்தைகளையும் காப்பாற்றினார்.

     சில நாட்கள் கழித்து மேரி தங்கி இருந்த எக்கனஞ் கிராமத்தில், இரண்டு கூட்டத்தினரிடையே ஒரு நிலத்துக்காக சண்டை நடக்கப்போகிறது என்பதை அறிந்து அங்கே விரைந்து சென்றார். அங்கே குறைந்த பட்சம் 50 பேர்  இரண்டு பக்கத்திலும் கூடி மிகவும் மூர்க்க கோபமாக இருந்தனர். மனதிற்குள்ளே ஜெபித்து தேவ ஞானத்தோடு, சிரிப்பு வரும் வகையில் வேடிக்கையாக சில காரியங்களைப் பேசி சரியான பதில் சொன்னபோது, 'மேரி அம்மா" உங்கள் தீர்ப்புதான் சரியானது. தேவன் உங்களுக்கு நிறைய அறிவு கொடுத்திருக்கிறார் என்று எல்லோரும் வியந்தனர். இதன் காரணமாக அது முதல் அவரை "அம்மா" என்றும் 'மேரி மா' என்றும் எல்லோரும் விரும்பி அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர்.  சண்டைக்காகக் காத்திருந்த இரண்டு கூட்டமும் எந்த தகராறும் செய்யாமல் நண்பர்களாக மாறினார்.

      1886 - ல் சவாலான ஒக்கோயோங் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தார். அவரது உண்மையான இரக்கம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் ஆப்ரிக்கர்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றதோடு "ஓகோயோங்கின் வெள்ளை ராணி" என்ற அன்பான பட்டத்தையும் பெற்றார்! 

    ஆப்பிரிக்க மக்கள் எல்லோரும் போதை பொருளுக்கு அடிமையாக, ஏன் பெண்கள் கூட... அனைவருமே 'குடி' மக்களாகவே இருந்தனர். ஒருமுறை இப்படிப்பட்ட பொல்லாத பெண்கள், திருடும் நோக்கத்தில் மேரியை தாக்குவதற்காக வந்தபோது, அவர்களையும் அன்போடு அரவணைத்து இயேசுவின் நற்செய்தியைச் சொல்லி நண்பர்களாகவும், உதவி செய்பவர்களாகவும் அவர்களை மாற்றினார்.

    ஒரு இரவு நேரம், குடிசையின் வெளிப்புறத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு வந்து பார்த்தால், ஒரு கருஞ்சிறுத்தை வாயில் குழந்தையை கவ்விக்கொண்டு வந்தது. இதை பார்த்த மேரி சற்றும் பயமில்லாமல் ஒரு கட்டையை எடுத்து அதன் முகத்தில் அடித்ததும், குழந்தையை போட்டுவிட்டு அது ஓடி விட்டது. சிறிய கீறல் கூட இல்லா அந்த குழந்தையை மேரி எடுத்து வளர்த்தார். இப்படி அநேக குழந்தைகளை குப்பை தொட்டியில் இருந்தும், புதர்களில் இருந்தும் எடுத்து வளர்த்தார். மேரி மா விடம் 51 இரட்டைப் பிள்ளைகள் வளர்ந்து வந்தனர்.

கிராமத் தலைவன் ஒருவன் இறந்துவிட்டால் அவன் மனைவியையும், பிள்ளைகளையும் அவனோடு சேர்த்து அடக்கம் செய்துவிடுவர். அதோடு கூட அவன் வீட்டில் இருக்கும் அடிமைகளையும் இன்னும் பலரையும் எதிரிகள் வந்து கொலை செய்து விடுவது அங்குள்ள ஒரு மூடப் பழக்கவழக்கம். ஒருமுறை தொலைதூரக் கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து மேரியிடம் தங்கள் கிராமத் தலைவன் சாகும் தருவாயில் இருப்பதாகச் சொல்லி, தாங்கள் வந்து உதவுமாறு கேட்டபோது, அவர் உறைந்து போனதோடு, 8 மணி நேரம் கால் நடையாய் வேதனையோடு அக்கிராமத்திற்கு நடந்து சென்று, அந்த தலைவனுக்காக ஜெபித்து அவனை உயிரோடு காப்பாற்றி, அந்த மூடப் பழக்க வழக்கத்தையும் ஒழித்து கட்ட மிகவும் பாடுபட்டு, அதைத் தடுத்து நிறுத்தினார். ஒருவேளை தலைவன் மரித்து விட்டால் இவர் உயிருக்கும் ஆபத்து இருந்தது. 

ஆரோஸ் என்ற ஒரு இன மக்கள் மிகவும் கொடியவர்கள், தங்கள் ஜனங்களை அடிமைகளாக விற்றுவிடுவார். அதோடு அவர்கள் தங்கள் கடவுளுக்கு மனிதர்களை பலியிடுவதோடு, மனித மாம்சங்களைச் சாப்பிடுபவர்கள். அவர்களுக்காக மேரி இருதயத்தில் பெரிய பாரத்தோடு வெகு நாட்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். பக்கத்து கிராமத்தில் சுமார் 800 பேரை ஆரோஸ் மக்கள் பிடித்து வைத்து அடிமைகளாக அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானிக்கும்போது, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மேரி, ஆண்டவரின் துணையோடு ஞானத்தோடு செயல்பட்டு, அந்தப் பகுதிகளில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்திடம் உதவி கேட்டார். பிரிட்டிஷ் ராணுவ தளபதி உடனடியாக 900 வீரர்களோடு அநேக படகுகளில் அங்கே சென்று அந்த மக்களை பயமுறுத்தி உங்கள் கைகளில் உள்ள துப்பாக்கிகளையும், அடிமைகளையும் ஒப்படையுங்கள் என்று சொன்னபோது, 'இல்லை, அந்த வெள்ளைக்காரி அம்மாவை இங்கே கொண்டுவாருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம்" என்று சொன்னார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் செய்ய முடியாததை மேரிமா செய்து காட்டினதைப் பார்த்து அவர்கள் எல்லோரும் அதிர்ந்துபோயினர். அவர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டபோது அந்த கிராமங்களுக்கு ரோடுகள், பள்ளிகள், ஆலயங்கள், மற்றும் மருத்துவமனை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. 1905-ல் அரசாங்கத்திடமிருந்து, தங்களோடு இணைந்து நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிய ஓர் அழைப்பு வந்தது. அதற்கு மாத சம்பளமாக ஒரு பெரும் தொகையைத் தருவதாகவும் வாக்கு அளிக்கப்பட்டது. மேரிக்கு இது  அந்தகாரத்தில் இருந்த ஜனங்களை ஆச்சரியமான ஒளிக்கு அழைத்து வரவும், ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கும் ஒரு நல்ல பாலமாக அமைந்தது.  

அவருக்கு வயது 62, அநேக முறை மலேரியாவால் பாதிக்கப்பட்ட படினாலும், அவர் சரீரத்திலும் முகத்திலும் கட்டிகள் வந்து அவர் அடிக்கடி வியாதிப்பட்டபடினாலும் அவர் மிகவும் சோர்வாகவும், சுகவீனமாகவும் இருந்ததாலும் ஜேனி என்ற பெண்ணின் உதவியால் சக்கர வண்டியில் உட்கார வைத்து எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். ஆப்பிரிக்க மக்களில் அநேக மாற்றங்கள் வந்தபோதும், குடிப்பழக்கம் மட்டும் ஒரு பெரும் சாபமாகவே மாறாமல் இருந்து வந்தது. இதைக் குறியாக வைத்திருந்த மேரிமா அரசாங்க ஆணைக் குழுவிடம் மனு கொடுத்தபோது, வியாபாரிகள் குற்றம் சாட்டினாலும் 'மேரிமா கூறியது தான் சரி" என்று மது விற்பனை முழுவதுமாய் தடை செய்யப்பட்டது. தேவன் வெற்றி சிறந்தார்!!!

    நைஜீரியாவின் கவர்னர் முதல் கீழ் நிலை மக்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் மேரிமாவுக்கு மலர்ச்செண்டுகளை அனுப்பி அன்பையும் மரியாதையையும் தெரிவித்தனர். சக்கர நாற்காலியில் சென்றுகொண்டே மக்களை சந்தித்து ஜெபிப்பதையும் ஆலோசனை கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களினால் அவர் அவதிப்பட்டபோது மருத்துவர் அவரை கடற்கரை ஓரமுள்ள தீவிற்கு ஓய்வெடுக்கச் செல்லும்படி கூறினார். இத்தனை வருடங்களும் களிமண் வீட்டில் தான், கிறிஸ்துவைப் போல தாழ்மையானவராகவே வாழ்ந்தார். 1915-ல் தன் நேசர் இயேசுவிடம் சரீர மரணத்தால் சேர்க்கப்பட்டபோது, ஆப்ரிக்க மக்கள் மட்டுமல்ல உலகமே சோகமானது. ஆப்பிரிக்க மக்கள், 'எங்களோடு சாப்பிட்டு, எங்களோடு படுத்து, எங்களுக்காகவே சிறந்த மாதிரியாக வாழ்ந்து காட்டினார் மேரிமா! நர மாமிச பட்சினிகளைக் கூட நல்ல மனிதர்களாக மாற்றினார்!!' என்று சொல்லி அவரைப் புகழ்ந்து பாராட்டினர். 

குட்டிஸ்! உங்களைக் கூட இயேசப்பா இப்படிப்பட்ட வல்லமையான பாத்திரமாக மாற்றி பயன்படுத்த விரும்புகிறார்.... சரிங்களா?