கிறிஸ்துவுக்குள் அன்பான குட்டிப்பிள்ளைகளே!
புதிய ஏற்பாட்டிலே யோவான் (ஜாண்) என்ற பெயரில் சிலர் உண்டு; இன்றும் உலகமெங்கும்‘ஜாண்’ என்ற பெயரில் நிறைய பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதோடு அநேக தேவமனிதர்கள், மிஷனரிகள் பற்றியும் கேட்டிருப்பீர்கள். இங்கே ஒரு ஜாண் ஐயாவைப் பற்றி பார்ப்போமா?
“நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” இது வேதவசனம் தான்; ஆனால், வேதம் இருந்தால் தானே படிக்கவும் மற்றும் அதின்படி நடக்கவும் முடியும். வெறும் குருக்கள் கைகளில் மாத்திரம் வேதம் இருந்தால், சாதாரண மக்கள் எப்படி ஆழ்ந்த சத்தியங்களை அறிந்து கீழ்ப்படிய முடியும்? அறியாமை என்னும் இருளை அகற்றி, சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நம்மை நடத்தி, வாழ்க்கைக்கு வழிகாட்டுவதோடு நித்திய ஜீவனையும், நித்திய மகிழ்ச்சியையும் தருவது வார்த்தையான இயேசுவின் வேதமே! அப்படித்தானே செல்லங்களே!!
14 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ திருச்சபைகளில், அதிகமான ஆடம்பரங்கள், அறியாமைகள், பாரம்பரியச் சடங்குகள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் நிறைந்து காணப்பட்டதோடு, மதவாதிகள் வசம் மாத்திரம் வேதம் இருந்தபடியால், தங்கள் பொய்யான உருட்டுத்தனத்தால் தங்களையும் மற்றும் மக்களையும் குருடராக்கி வைத்திருந்தனர். இந்நிலையில், ஒரு மாபெரும் புரட்சியாளராய் எழும்பிய, “சீர்திருத்தத்தின் விடிவெள்ளி” என்று அழைக்கப்பட்டவர் தான் ஜாண் விக்ளிப்.
இங்கிலாந்தின் வடயார்க்ஷயரின் விக்ளிப் என்னுமிடத்தில் ஒரு பணக்கார வீட்டின் மகனாக கி.பி. 1320 - ல் இவர் பிறந்தார். தனது கல்லூரி, இறையியல் படிப்புகளை முடித்து, 1360 - ல் போதகராகப் பணிபுரிந்தார். ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் 1372 – ல் தத்துவத்துறையில் ‘டாக்டர்’ பட்டம் பெற்று, “ஆக்ஸ்போர்டு மலர்” என்று அழைக்கப்பட்டார். அந்நூற்றாண்டின் தலைச்சிறந்த கல்விமான் மற்றும் ரோமன் கத்தோலிக்க ஆயராகவும், ஆக்ஸ்போர்டு இறையியல் கல்லூரியின் காண்டர்பரி மன்றத்தின் மேலதிகாரியாகவும் பொறுப்பேற்றார். வேதத்திற்கு மாறான போப்பின் ஆணைகளை அவர் எதிர்த்து எழுதி பேசியதால் ஆக்ஸ்போர்டிலிருந்து விரட்டப்பட்டார். அந்தோ.. அவருக்கு எத்தனை பெரிய சோகம்…!
குருவானவர் நடத்தும் நற்கருனையில் பங்குபெற்றால் மட்டுமே இரட்சிப்படைய முடியும் என்றும், ஒரு ஆத்துமாவிற்கும் மற்றும் நரகத்திற்கும் இடையில் குருவானவர் இருப்பதாகவும், ஆத்துமாக்களின் இரட்சிப்பு குருவின் கைகளில் தான் இருப்பதாகவும் போப்பைச் சார்ந்தவர்கள் போதித்தனர். ரோமாபுரிக்குப் புனிதப் பயணம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையையும் ஆயர் மற்றும் பேராயர்கள் ஊக்குவித்தனர். விக்ளிப் இதற்கு விரோதமாக கொதித்தெழுந்ததோடு உறுதியாகப் போராடினார். கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் கிடைக்கும் இலவச இரட்சிப்பின் சத்தியங்கள் புறக்கணிக்கப்பட்டு, காணிக்கைகள், பணம் மற்றும் புனிதயாத்திரைகள் மூலம் கிறிஸ்துவை அடையலாம் என்ற புரட்டு உபதேசங்களை விக்ளிப் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சபைகளில் நடைபெறும் தவறுகளான பாவமன்னிப்புச் சீட்டு விற்பது, மதத்தலைவர்கள் பணம் சம்பாதிக்க மக்களைக் கொள்ளையடிப்பது மற்றும் மதத்தலைவர்களின் அரசியல் ஆட்சி போன்றவற்றை அவர் விமர்சித்தார்.
திருச்சபைகளில் வேரூன்றி காணப்பட்ட மூடத்தனங்களை குழிதோண்டி மூடப் பிரயாசப்பட்டதால் போப்பிற்கும், பாதிரியார்களுக்கும் பகைவனானார்.
வேதத்தின் சத்தியங்களை தாய்மொழியில் கற்றறியும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என்ற எண்ணத்தோடு, இலத்தின் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வேதத்தை மொழிபெயர்த்து 1380 –ல் வெளியிட்டார். அப்போது அச்சுக் கூடமும் இல்லை, கையினால் எழுதப்பட்ட வேதாகமமே மக்கள் கைகளை அடைந்தது, சாதாரண மக்களின் கைகளில் வேதத்தை அவர் தந்ததால், ‘பன்றிகள் முன் முத்துக்களை எறிந்து விட்டார்’ என்ற பெரும் குற்றச்சாட்டை விக்ளிப் மீது சுமத்தி போப்பைச் சார்ந்தவர்கள் அவரைப் பகைத்தனர். ஆனால், மக்களோ அவரை ஆதரித்தனர். ஊர்ஊராகச் சென்று
வேதத்தின் பிரதிகளை மக்களுக்கு வழங்கினர்.
விக்ளிப்பின் போதனைகளால் கோபமடைந்த போப், அவரை விசாரித்து தண்டிக்க ஆணையிட்டார். அரசனும் மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்ததாலும், எதிர்த்த போப் சீக்கிரத்தில் இறந்ததாலும், எதிரிகளால் அவருக்கு ஆரம்பத்தில் வந்த ஆபத்து நீங்கியது. சிறிது காலம் கடந்து அரசரும் விக்ளிப்பிற்கு எதிராக மாறவே, லண்டனில் நடந்த ஆலோசனை மன்றத்தில் 1382 – ல் விக்ளிப்பின் கொள்கைகளைக்; கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவைகளைப் பரப்புவோரைச் சிறையிலடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவரது போதனைகள் பின்னர் ஜாண் ஹஸ், மார்ட்டின் லூத்தர் போன்ற மறுமலர்ச்சித் தலைவர்களைத் தட்டி எழுப்பியது. அவருடைய எழுத்துக்கள் தடை செய்யப்பட்டன. எப்பக்கத்திலும் நெருக்கங்கள், நிந்தனைகள் நடுவிலும் விக்ளிப் தன் பணிகளை அமைதியாகச் செய்து வந்தார். பலமுறை விசாரணையாலும் மற்றும் சித்திரவதையாலும் அவர் உடல் நிலை மிகவும் மோசமானது. 1384 – ல் லட்டர்வொர்த் (Lutterworth) என்னுமிடத்தில் போதக ஊழியம் செய்துவந்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, உடல் மண்ணில் விழ தன் உயிரை தேவனின் கரங்களில் ஒப்புவித்தார். இங்கிலாந்து மன்னர் ஹென்றி IV கி.பி. 1401- ல் விக்ளிப்பின் ஆதரவாளர்களை எரித்துக் கொல்ல சட்டம் இயற்றினார். பக்தர்கள் பாடுகளை பொறுமையோடு சகித்தார்கள்.
ஆமா அந்த ஐயா விலைக்கிரயம் செய்து வாங்கித் தந்த பைபிளை கையில வச்சிக்கிட்டு நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க…? படிச்சி அப்படியே வாழ்க்கையில apply பண்ணுவோமா சுட்டீஸ்?