Hi குட்டிப் பிள்ளைகளே! இயேசு கிறிஸ்துவை விட்டு தூரமாக, கடவுள் இல்லை என்று நாஸ்திகனாக வாழ்ந்த அதோனிராம் ஜட்சனின் வாலிப நாட்களைக் குறித்தும், வியாதிப்படுக்கையில் கிடந்த தனது நண்பனின் மரணத்தைத் தொடர்ந்து, மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை தனது வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, 'ஆண்டவரை மாத்திரமே தன் வாழ்நாள் முழுவதும் பிரியப்படுத்தவேண்டும்' என்ற எண்ணத்தோடு மிஷனரியாக தன்னை அர்ப்பணித்துப் புறப்பட்டுச் சென்ற அவரது வாழ்க்கையைக் குறித்தும், பர்மாவின் சக்கரவர்த்தியினால் சிறைச்சாலையில் வைக்கப்பட்டதைக் குறித்தும் மற்றும் விடுதலை செய்யப்பட்டதைக் குறித்தும் சென்ற இதழில் வாசித்தோம் அல்லவா! இந்த இதழில், சிறையிலிருந்து அவர் விடுதலையானதைத் தொடர்ந்து அவர் செய்த ஊழியத்தின் தொடர்ச்சியை அறிந்துகொள்ளலாமா!
சிறையிலிருந்து அதோனிராம் ஜட்சன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் ஒரு அறையில், ஆன் அம்மையார் கடுமையான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவராகப் படுத்திருந்தார். ஆன் அம்மையார் சற்று குணமடைந்த பின்னர் அங்கிருந்து குடும்பமாக வேறு இடத்திற்கு மாறிச் சென்று, அங்கே அவரை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் கமிஷனருக்கு உதவி செய்வதற்காக ஆவா பட்டணத்திற்குச் சென்றார் ஜட்சன். ஜட்சன் அங்கு இருக்கும்போது, அந்தோ பரிதாபம்! டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும், 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஆன் அம்மையார் இறந்த செய்தி அவருக்குக் கிடைத்தது. மனைவியின் இறுதி நேரத்தில் உடன் இருக்க முடியாத நிலையினை எண்ணி ஜட்சன் துக்கப்பட்டார்.
துக்க பாரத்தினால் தொய்ந்துபோன அவர், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த காட்டில் ஒரு சிறிய குடிசை அமைத்து ,அதில் சில காலம் தங்கி இருந்தார். பிற மிஷனரி நண்பர்கள் மூலமாக அவரை ஆறுதல்படுத்தித் தேற்றினார் தேவன். இச்சூழ்நிலையிலும், நடந்த எல்லா காரியங்கள் மூலமாக தன்னை ஆண்டவர் தமது அருகில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தான் ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஜட்சன் உணர்ந்தபடியால், அவர் ஆண்டவரின் அழைப்பையோ, நடந்த காரியங்களைப் பற்றியோ கேள்விகள் கேட்கவில்லை. அதன் பிறகு அவர் 'மௌல்மீன்' என்ற ஊரில் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் தொடர்ந்து அவருடைய வார்த்தையை மொழிபெயர்க்கவும் ஆரம்பித்தார். பின்பு சபையும் அங்கே உண்டானது. 1834 ஆம் ஆண்டு முழு வேதாகமும் பர்மிய மொழியில் வெளிவந்தது. 1840 ஆம் ஆண்டு அது முழுவதுமாக திருத்தி அமைக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் நூற்றுக்கும் அதிகமான மக்கள் சபையில் சேர்க்கப்பட்டனர். அந்நாட்களில், கடுமையான உழைப்பினால் பலன் குன்றி காச நோயினால் பாதிக்கப்பட்டார் ஜட்சன்.
33 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே ஜட்சன் தனது தாய் நாடாகிய அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றார். என்றாலும் அவர் அங்கே அதிக நாள் தங்கி இருக்க விரும்பவில்லை. மீண்டும் அவர் பர்மாவுக்குத் திரும்பினார். திரும்பியவர் திரும்பவும் தன் தாய் நாட்டைக் காணவே இல்லை. மனைவியின் மறைவுக்குப் பின் தனியாக 24 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார். அவர் பர்மிய மொழியில் ஒரு சொல் அகராதியை அமைத்து முடித்தார். தனக்கு சுகம் கிடைப்பதற்காக அவ்வப்போது கடல் யாத்திரை செய்தார். அவ்விதமாக ஒரு முறை கடல் யாத்திரை சென்றபோது 1850 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ம் நாள் தன்னுடைய 62 ஆம் வயதில் அவர் நடுக்கடலில் கப்பலிலே மரித்தார். மூன்று பிள்ளைகளையும் நற்கனிகளைத் தரும் விதைகளாக மியான்மரின் மண்ணிலே அடக்கம் செய்தார். மனைவியையும் அப்படியே பர்மாவிலே விதைத்தார். ஆனால், அவர் அடக்கம் செய்யப்பட்டக் கல்லறை பூமி எது தெரியுமா? எந்த தேசத்தை தன் இருதயத்தில் ஏந்தி மிஷனரியாக கடந்து வந்தாரோ அந்த தேசத்தின் பெயர் உள்ள பரந்து விரிந்த இந்து மகா சமுத்திரத்தில் தான் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
"இந்த பர்மாவில் சிலுவை நிரந்தரமாக நாட்டப்படும் வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டுச் செல்வது இல்லை." என்று இளைஞனாக இருக்கும்போதே வைராக்கியமாக தீர்மானித்து இருந்தார். அதன் பயனாக 30 ஆண்டுகள் கழிந்த பிறகு 1850 இல் பர்மாவில் 63 ஆலயங்களும், 123 அருட்பணியாளர்களும், ஊழியர்களும் ஆண்டவரை ஏற்றுக்கொண்ட 7000-க்கும் மேலானவர்களும் இருந்தார்கள். ஜட்சன் பர்மாவில் ஏற்றி வைத்த தீபம் இன்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கிறது