June 2025



 

ஒல்லியான உருவம்! ஒதுங்கி வாழும் சுபாவம்!! கொண்ட இவர் லண்டன் மாநகரின் மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  மிஷனரியாகப் போக அவருக்கு ஆசை; ஆனால், இவரை பார்ப்பவர்கள் இவர் அதற்கு தகுதியானவரா? என்றுதான் சந்தேகப்படுவர். இவர் உலக ஐசுவரியம் இல்லாதவர், வறுமையில் வாழ்ந்தவர், வாழ்க்கை வசதிகளை உதறித் தள்ளியவர். அநேகரை ஐசுவரியவான்களாக்கத் தன்னை ஏழ்மையாக்கினவர். ஜீவனுள்ள தேவனை முழுவதுமாய் விசுவாசித்து அவரின் வார்த்தையை உறுதியாய் பற்றிப்பிடித்து, அவரையே நம்பிச் சார்ந்ததே இவரது வாழ்க்கையின் ரகசியம். வேதத்தில் சொல்லப்பட்ட 'என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலன் உண்டு" என்று பவுல் சொன்னது போல, இவரைப் போன்ற மிகப் பெலவீனமான மனிதர்களையே தம்முடைய மகிமைக்காக, தம்முடைய சித்தத்தின்படி தேவன் பயன்படுத்தி வருகிறார். லண்டனில் மருத்துவம் பயின்று வந்த நாட்களில், ஒரே ஒரு ரொட்டியை காலையும் மதியமும் சாப்பிட்டுக் கொண்டு, வீட்டிற்கும் மருத்துவக் கல்லூரிக்கும் இடையே உள்ள 15 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சென்று வந்து கொண்டிருந்தார். யார் இவர்....?

    அன்று உலகின் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்ததும், இன்று பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் இரண்டாவது பெரிய நாடானதுமான சீன நாட்டிற்கு முன்னோடி மிஷனரியாகச் சென்று பெரிய "சீன உள்நாட்டு மிஷன்"- ஐ ஸ்தாபித்தவர், இவர் தான் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர்.

1832 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் இங்கிலாந்து தேசத்தில் பிறந்தார் ஹட்சன் டெய்லர். நல்ல கிறிஸ்தவ பெற்றோர், அவருடைய இளமையிலேயே அவருக்கு வேதத்தைப் போதித்ததோடு, எபிரேய மொழியையும் கற்றுக் கொடுத்தனர். அவருடைய தகப்பனார் தன் செல்ல மகனின் அருகில் உட்கார்ந்துகொண்டு பல புதிய மற்றும் அரிய காரியங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்களில், ஒரு நாள் அவர்களின் பேச்சு பெரிய சீன நாட்டைப் பற்றியதாக இருந்தது. ஐரோப்பிய நாட்டில் இருந்த திருச்சபைகள் சீன நாட்டிற்கு மிஷனரிகளாக யாரையும் அனுப்புவதோ அல்லது எதையாவது செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமோ அவர்களுக்கு இல்லை என்பதைக் கேட்டுக் கொண்டிருந்த குட்டித் தம்பியான ஹட்சன், 'நான் பெரியவனாகி படித்து முடித்து வாலிப வயதில் சீனாவுக்கு மிஷனரியாகச் செல்வேன்' என்று உள்ளத்திலே சொல்லிக் கொண்டான். அப்பொழுது அவனுக்கு ஐந்து வயது தான். 

ஆவிக்குரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் 14 ஆம் வயதில் ஒரு கைப்பிரதியில், "எல்லாம் முடிந்தது" என்ற தலைப்பில், நம் அன்பு தெய்வம் இயேசு சிலுவை மரத்திலே சொன்னதாக எழுதப்பட்ட வார்த்தைகளைப் படித்த போது தான் பாவ உணர்வு அடைந்து இரட்சிப்புக்கு நேராக தன் இருதயத்தை அவர் திருப்பினார். என்ன நடந்தது தெரியுமா குட்டீஸ் உங்களுக்கு...? அதே நாளில் அவருடைய தாயார் கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்தில் இருந்து கொண்டு தன் அன்பு மகனுக்காக அதிக பாரத்தோடு அவன் எப்படியாவது இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் மிகப்பெரிய அற்புதம்! அதுதான் "இரட்சிப்பு". குட்டித் தம்பித், தங்கையே, உனக்கு இந்த அனுபவம் உண்டா? அதைப் பெற்றுக் கொண்ட புதிய அனுபவத்தினால் ஹட்சன் மிகவும் சந்தோஷமடைந்தார். தனது தாயார் வீட்டிற்கு வந்தபோது அதை பகிர்ந்து கொண்டு இருவருமாக சேர்ந்து ஆண்டவரைத் துதித்தனர்.

அது ஒரு மதிய வேளை முழங்காலில் தன் திறந்த வேதாகமத்தோடு நின்று கொண்டு, ஆண்டவரிடம், "இயேசுவே நான் எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கற்றுத் தாரும். நீர் சொல்லும் வரை இந்த அறையில் இருந்து நான் வெளியே செல்லப் போவதில்லை என்று ஜெபித்தார் ஹட்சன். "சீன தேசத்திற்கு நீ செல்ல வேண்டும், அதற்காகவே உன்னைக் கரம் பிடித்தேன்" என்ற தெளிவான சத்தம் அவருக்கு கேட்டது. மீட்பின் அனுபவம் பெற்ற சில மாதங்களிலேயே அழைப்பின் குரல் அவரைத் தேடி வந்தது.

இனி சும்மா இருக்க முடியுமா என்ன...?  சீன தேசத்தின் தகவல்களைத் தேடிச் சேகரித்தார். அதற்கென்று எல்லா விதங்களிலும் ஆயத்தம் செய்து கொள்ளவும், மொழியை கற்றுக் கொள்ளவும் முனைந்து நின்றார். சுயமாகவே சீன மொழியைக் கற்றுக்கொண்டு லூக்கா சுவிசேஷத்தை சீன மொழியில் படித்து முடித்தார். 

சீன மக்களின் இதயங்களை வெல்ல சுவிசேஷத்தை பிரசங்கிப்பதோடு வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்த அவர், மருத்துவம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சையோடு காணப்பட்டார். ஹல்லில் மருத்துவராக இருந்த தனது மாமாவிடம் சென்று சில அடிப்படை திறன்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்நாட்களில், ஹட்சன் முதன் முதலில் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நம்பிக்கைக்கடுத்த பாடங்களையும் கற்றுக் கொண்டார்.                            
                                                                                                                                    - தொடரும்