October 2026

 

       மிஷனரி வாழ்க்கை வரலாறு – அலெக்சாண்டர் டஃப்    

 மனப்பாட வசனம் : ஏசாயா 50 : 4

ஹாய் அன்பான செல்லங்களே !  

மிஷனரிகள் பெயர்களில் நிறைய பள்ளிக்கூடங்களைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள்; அல்லது நேரில் பார்த்திருப்பீர்கள்; அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் நீங்கள் படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவைகளின் சரித்திரம் மற்றும் மிஷனரிகளின் வரலாறு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 மிஷனரிகளின் பெயர்களில் பள்ளிகள், கல்லூரிகள், ஆலயங்கள், ஆஸ்பத்திரிகள், ஊர் மற்றும் நகரங்களின் பெயர்கள் இன்னும் சாலைகள், தெருக்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பெயரைப் படிக்கும்போதே இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறது. அவர்களின் தியாகங்களும் பிரயாசங்களும் என்றும் அழிக்கப்படமுடியாமல் நினைவுத்தூண்களாய் இன்றும் நின்றுகொண்டிருக்கின்றன. தென்னகத்திலே எங்கெல்லாம் மிஷனரிகள் ஆலயங்களை எழுப்பினார்களோ, பக்கத்திலே படிப்பறிவிற்காக ஒரு பள்ளிக்கூடத்தையும் கண்டிப்பாகக் கட்டியெழுப்பி, பின்னர் மருத்துவ வசதிகளையும் செய்து தந்தனர். மிஷனரிகளின் வேலை வெறும் சுவிசேஷம் அறிவிப்பது மட்டும்தான் என்றால், நமக்கு பெரிய பெரிய நன்மைகளும், படிக்க வாய்ப்பும் கூட கிடைத்திருக்காது.

ஸ்காட்லாந்து தேசம், முதன் முறையாக கடல் கடந்து மிஷனரிகளை அனுப்ப ஆரம்பித்தபோது, ஸ்காட்லாந்து திருச்சபையின் (Church of Scotland) முதலாவது மிஷனரியாக அனுப்பப்பட்டவர் தான் அலெக்சாண்டர் டஃப். கல்வியின் மூலம் இந்தியாவில் சுவிசேஷத்தைப் பரப்பியவர். குறிப்பாக, மேற்கு வங்காளத்தின் தற்போதைய கொல்கத்தாவில், உயர்ஜாதி மக்களையும் தொட வேண்டுமானால் சுவிசேஷப் பணியை கல்விப் பணியோடு இணைத்துச் செய்யாவிடில் முடியாது என்ற உறுதியான தரிசனத்திற்காய் தேவன் தெரிந்தெடுத்தப் பாத்திரம் இவர்.  

1806 ஆம் ஆண்டு, ஏப்ரல் 25 ல் ஸ்காட்லாந்தில் அலெக்சாண்டர் டஃப் பிறந்தார். இளம் வயதிலேயே ஊழிய ஆர்வமும் கூடவேப் பிறந்தது. ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியல் பட்டமும், கூடவே வேதாகமப் பட்டமும் பெற்றார். ஸ்காட்லாந்தில் எழுப்புதலும் மிஷனரிபாரமும் எரிந்து பரவிய காலம் அது. கடல்கடந்து சென்று மிஷனரியாகச் செல்லவும்;, நவீன கிறிஸ்தவ கல்வியின் முன்னோடிகளில் ஒருவராக சிறந்த கல்வியாளராக புதிய தரிசனத்தோடு, குறிப்பாக இளைஞர்களைக் கல்வியின் மூலம் கிறிஸ்துவிடம் வழி நடத்த வேண்டுமென்ற ஆழமான பார்வையைக் கொண்டிருந்தார். இந்தியாவில் செல்வந்தர்களும் உயர்குலத்தோரும் சுவிசேஷத்தை அறிந்திட மிகக்குறைந்த வாய்ப்புதான் இருந்தது. 1829 ஆம் ஆண்டு, மிஷனரியாக, மனைவியோடு கூட இந்தியாவிற்கு அவரது கப்பற்பயணம் ஆரம்பித்தது. இரண்டு முறை கப்பல் விபத்தில் ஏற்பட்ட சேதத்தினால் தன்னுடைய எல்லா புத்தகங்களையும், உடமைகளையும் மற்றும் சான்றிதழ்களையும் (Certificates) கடலில் இழந்தார். இருந்தபோதிலும் அவர் இந்தியாவில் ஆற்றப்படவேண்டிய தன் அழைப்பிலிருந்து பின்வாங்கவேயில்லை.

1830 -ம் ஆண்டு கொல்கத்தாவில் கால் பதித்தார். அந்த ஆண்டிலேயே இளைஞர்களின் சிந்தனையை மாற்றும் நோக்கத்தோடு GENERAl ASSEMBLES INSTITUTION என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். இது பின்னாட்களில் SCOTTISH CHURCH COLLEGE என வளர்ந்தது. வெறும் ஐந்து மாணவர்களோடு ஆலமரத்தடியில் ஆரம்பித்து ஆனால் ஒரே வாரத்தில் 300 மாணவர்களாய் பெருகி  இன்றும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வங்காள மொழி பேசும் உயர்குல இளைஞர்கள் இதில் மிகவும் ஆர்வம் காட்டினர். ஆங்கில மொழிமூலம் கல்வி அறிவூட்டியதோடு மேற்கத்திய கலை, அறிவியல், வரலாறு, தத்துவம் போன்ற பாடங்களுடன், வேதாகமத்தையும் கிறிஸ்தவ போதனைகளையும் கற்பித்தார். மதத்திற்காக எதையும் செய்யாமல், கல்வியினால் அறிவை வளர்த்து உண்மையைத் தேடுவதற்கான வாய்ப்பைத் தந்து, மக்கள் மூடநம்பிக்கைகளை ஒழித்துவிட்டு கண்திறக்கப்படும்போது கிறிஸ்தவ விசுவாசத்தை அறிமுகப்படுத்துவதே அதின் நோக்கம். மேற்கத்திய அறிவியலை கற்கும் மாணவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் கருத்துக்களையும் ஆராய்வார்கள் என்று நம்பினார். தமது கல்வி நிறுவனங்களில் தினமும் ஜெபம் மற்றும் வேதவாசிப்புடன், அதற்கு விளக்கமும் சொல்லிவந்தார். கூடவே வேதமும் ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவருடைய கல்வி நிறுவனங்களில் கற்ற பல முக்கியமான மாணவர்கள் இந்திய சமூகத்திலும் உலகிலும் பெருமளவில் முக்கியமான தாக்கத்தை உண்டாக்கினர். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் வளருவதற்கு இவர் மிகவும் செயல்பட்டார்.

                                                 தொடரும் .........…