Promotional Centers & Contacts

FEBRUARY 2025

 

இவரு படிப்பில படுசுட்டி! கணக்குல புலி !!  குருவானவர் வீட்டுப் பிள்ளை, பின்ன சொல்லவா வேணும்? சிறுவயதிலேயே பைபிளும் நல்லாத் தெரியும், பாட்டுப் பாடத் தெரியும், பிரசங்கமும் பண்ணத் தெரியும்! பின் நாட்களில் ஆண்டவர் தன்னை மிஷனரி ஊழியத்திற்கு என்று தெரிந்தெடுத்ததை அறிந்துகொண்ட இவர், நம் இந்திய நாட்டிற்கு மிஷனரியாக வரவேண்டும் என்று தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். ஆனால், நடந்தது என்ன தெரியுமா? கப்பலில் நெடுங்கடல் பிரயாணம் செய்து கல்கத்தா துறைமுகம் வந்து கரை இறங்கிய இவரை இந்திய நாட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது கிழக்கு இந்திய கம்பெனி. 'என்ன இது ஆண்டவரின் சித்தம் இல்லையா?' என்று ஏக்கத்தோடு நின்று கொண்டிருந்த இவர் அங்கிருந்து கப்பல் ஏறி பர்மா என்று அழைக்கப்பட்ட நம் அண்டை நாடான மியான்மரின் தலைநகரம் ரங்கூனில் போய் இறங்கி தடம் பதித்தார். நம் தாய் நாடாம் இந்தியாவை நேசிக்கும் தேவன், மியான்மர் தேசத்தையும் நேசித்ததினால் இவரை அங்கு ஓர் அப்போஸ்தலனாக, முன்னோடி மிஷனரியாக அனுப்பிவைத்தார். யார் இவர்? இவர்தான் அதோனிராம் ஜட்சன்... அவரைப் பற்றிதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.

       அந்த பாஸ்டர், வீட்டில் உள்ள குட்டிப் பிள்ளைகள் சேர்ந்து சபை ஆராதனை நடத்திக்கொண்டிருக்கின்றனர். 'இயேசுவை அறியாமல் உலகில் வாழும் பிற மக்களுக்கும் சுவிசேஷத்தைச் சொல்லப் புறப்பட்டுச் செல்லவேண்டும்' என்ற அர்த்தமுடைய பாடல்கள் பாடப்படுகின்றன. நான்கு வயது குட்டிப் பையன் ஒரு நாற்காலியில் ஏறி நின்றுகொண்டு, அப்படிப்பட்ட ஒரு சவாலான பிரசங்கத்தைச் செய்கிறான். இது ஒரு ஆராதனையோ அல்லது சண்டே ஸ்கூலோ அல்ல, வெறும் விளையாட்டு தான். ஆனால், வரும் நாட்களில் இதற்காகவே அவர் பிடிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை ஜட்சன் அறியவில்லை.

1788 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்பதாம் நாளில் அமெரிக்காவின் மல்தேனில் உள்ள மாசாருசெட்ஸ் என்ற இடத்தில் பிறந்த இவர், பிறவியிலேயே மிகவும் திறமைசாலி. மூன்று வயதிலேயே வேதத்தின் ஒரு அதிகாரம் முழுவதையும் படித்ததைக் கண்ட இவரது தந்தை மிகவும் வியப்படைந்தார். கணிதத்தில் பெரிதும் விருப்பம் இருந்ததால், 10 வயதிலேயே கணித மேதையாக விளங்கினார். மேலும் இலத்தின் கிரேக்க மொழிகளில் கருத்துள்ள இறையியல் புத்தகங்களையும் படித்தார், கிரேக்க மொழியில் இவருக்கு இருந்த திறமை குறிப்பிடத்தக்கது. பதினாறாம் வயதில் பிரவுன் யூனிவர்சிட்டியில் படித்த இவர், 19 வயதிலே தன் வகுப்பில் முதல்வராக பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் அவரைப் போன்ற திறமையான ஜேக்கப் ஈமாஸ் என்பவர் நண்பராகக் கிடைத்தார். ஆனால், அவரோ ஆண்டவரை நம்பாத, 'கடவுள் இல்லை' என்று சாதிக்கக் கூடிய மனிதன். நண்பனாலே கவரப்பட்ட அந்தோனிராம் ஜட்சன், தானும் வேதத்தை நம்பாத ஒருவனாக மாறியதால், 'கடவுளை ஒருவன் தனிப்பட்ட முறையிலே அறிந்துகொள்ள முடியாது' என்று கூறினார். தான் ஒரு முழு நாஸ்திகனாக மாறியதோடு தன் பெற்றோரிடமும் 'கடவுள் இல்லை' என வாதம் புரிந்தார். இதனால் போதகர் குடும்பமான அவருடைய பெற்றோர் மிகவும் புண்பட்டார்கள். 

       இது எப்படி இருக்கு... பாருங்கடா செல்லங்களே! சின்ன வயசுல எவ்வளவு நல்லப் பிள்ளையா வேதத்தை நேசித்த அதோனிராம் இப்படி மாறிவிட்டாரே... நீங்க அப்படி இருக்க மாட்டீங்க தானே....?

     ஜட்சன் தன்னுடைய பட்டப்படிப்பிற்குப் பிறகு தான் ஒரு சிறந்த வழக்கறிஞராக அல்லது நாடக மற்றும் நகைச்சுவை ஆசிரியராக வரவேண்டும் என்ற தணியாத ஆவல் கொண்டார். ஆகவே அவர் நியூயார்க் பட்டணத்தில் உள்ள ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார். குறிக்கோள் ஒன்றும் இல்லை, நிம்மதியும் இல்லை, திருப்தியும் இல்லவே இல்லை. ஆனால், அவருடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டு இயேசுவை நோக்கி ஓட வைத்த சம்பவம் தான் என்ன என்று அடுத்த இதழிலில் பார்ப்போமா?

                                         - தொடரும்